இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம் தொடக்கம் முதல் கரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 50,000-க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு பிரபலங்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ எனக்கு சில நாட்களாக கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தினர் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.
கரோனா உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இல்லத்தில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறேன். அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.