ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் சென்னையின் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. சென்னை அணி 4-3-3 என்ற கணக்கிலும், கேரளா அணி 4-3-1-2 என்ற கணக்கிலும் களமிறங்கின. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே சென்னை அணி முதல் கோலை அடித்தது.
இந்த கோலை தானா அடித்தார். 13வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மென்டோஸா தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இந்த கோல் அடிக்கப்பட்ட போது சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரான அபிஷேக் பச்சன் கைதட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
மெண்டோஸா அபாரம்
சென்னை அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியது. 79 மற்றும் 81வது நிமிடத்தில் மெண்டோஸா மேலும் இருகோல்கள் அடித்தார்.
கேரள அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணியின் ஜெர்மான் இந்த கோலை அடித்தார். முடிவில் சென்னை அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சென்னை அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
சென்னை அணிக்கு இது 4வது வெற்றியாகும். இந்த வெற்றியால் கடைசி இடத்தில் இருந்து புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. மேலும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.