தென் ஆப்பிரிக்க அணி கடந்த 9 ஆண்டுகளாக வெளிநாட்டு தொடர்களை இழக்காமல் இருந்து வருகிறது. கடைசியாக அந்த அணி 2006ல் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இழந்திருந்தது. அதன் பின்னர் வெளிநாட்டு மண்ணில் 10 தொடர்களை வென்றுள்ளது. வெளிநாட்டு தொடர்களில் சாதித்து வரும் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் இந்திய அணி நாக்பூரில் இன்று தொடங்கும் 3வது டெஸ்டில் களமிறங்குகிறது.
4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று 3வது டெஸ்ட் தொடங்குகிறது. இந்திய ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் ஆடு களமாக இருந்த நாக்பூர் சமீபத்தில் ரஞ்சி கோப்பை போட்டிக்காக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது. இதனால் இந்த ஆடுகளமும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு சோதனை களமாகவே இருக்கும்.
2006ல் இலங்கை மண்ணில் தொடரை இழந்து தென் ஆப்பிரிக்கா அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் இரு முறை (2008-09, 2012-13) தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து (2008), மேற்கிந்தியத்தீவுகள் (2010), நியூஸிலாந்து (2011-12), பாகிஸ்தான் (2007-08), இலங்கை (2014), வங்கதேசம் (2007-08), ஜிம்பாப்வே (2007-08) ஆகிய நாடுகளிலும் தொடரை வென்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 0-1 என பின்தங்கிய நிலையில் இன்று தொடங்கும் போட்டியையும் சேர்த்து இன்னும் 2 டெஸ்டில் பங்கேற்க உள்ளது. அந்த அணி இந்திய மண்ணில் கடந்த இரு தொடர்களையும் டிரா செய்துள்ளது. இந்த இரு தொடர்களிலும் (2007-08 மூன்று டெஸ்ட், 2009-10 இரு டெஸ்ட்) தென் ஆப்பிரிக்க அணி முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த ஆட்டத்தில் பதிலடி கொடுத்து தொடர்களை 1-1 சமனில் முடித்திருந்தது.
இதுதவிர இந்த 9 ஆண்டு காலத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2010-11 தொடரை (0-0) எனவும், இங்கிலாந்துக்கு எதிராக 2009-10ல் 1-1 எனவும், வங்கதேசத்துக்கு எதிராக 2015ல் (0-0) எனவும் தொடரை தென் ஆப்பிரிக்க அணி டிரா செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் இதற்கு முன்னர் 1999-2000ம் ஆண்டில் 2 போட்டி கொண்ட தொடரை 2-0 என வென்றது. 1996-97ல் விளை யாடிய போது 3 போட்டி கொண்ட தொடரை 1-2 எனவும் 2004-2005ல் நடைபெற்ற தொடரை 0-1 எனவும் இழந்தது. 2007-2008, 2009-2010ல் நடைபெற்ற தொடர்களை சமன் செய்தது.
அணி விவரம்
இந்தியா:
விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவண், புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விருதிமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, குருகீரத்சிங் மான்.
தென் ஆப்பிரிக்கா:
ஆம்லா (கேப்டன்), டி வில்லியர்ஸ், டீன் எல்கர், டுபிளெஸ்ஸி, டெம்பா பவுமா, டுமினி, வான் சைல், டேன் விலாஸ், டேன் பைடு, சைமன் ஹார்மர், இம்ரான் தகிர், டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், கைல் அபாட் , ரபாடா, மெர்சண்ட் டி லாங்கே.
நாக்பூரில் 2 வெற்றி
நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் முதன்முறையாக 2008ல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்டில் இந்தியா 172 ரன்னில் வெற்றி பெற்றது. இதுவரை இங்கு 4 டெஸ்டுகளே நடைபெற்று உள்ளது. இதில் இந்தியா இரண்டில் வெற்றி பெற்றது. 2010ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்னில் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தது. கடைசியாக 2012 ம் ஆண்டு இங்கிலாந்துடன் இந்தியா மோதிய போட்டி டிராவில் முடிந்திருந்தது.
ஆடுகளங்கள் சர்ச்சை தேவை இல்லாதது: விராட் கோலி
நாக்பூர்ஆடுகளத்தின் தன்மை பற்றி எப்போதும் நாங்கள் கவலைப்பட்டது இல்லை, தேவையில்லாமல் இந்திய ஆடுகளங்கள் பற்றி சர்ச்சை எழுப்பப்படுகிறது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டி: இந்திய ஆடுகளங்கள் பற்றி மட்டும் ஏன் தேவையில்லாத கருத்துகள் வருகிறது என்பது புரியவில்லை. இரு அணிகளுமே ஆட முடியாது என்று கூறி விலகினால்தான் அந்த ஆடுகளம் மோசம் என்று அர்த்தம். இரு அணிகளுமே எதுவும் கூறாத நிலையில் தேவையில்லாமல் இந்த பிரச்சினை எழுப்பப்படுகிறது.
இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பது இயல்பான ஒன்றுதான். வேகப்பந்து வீசக்கூடிய ஒரு பேட்ஸ்மேனும், சுழற்பந்து வீசக்கூடிய ஒரு பேட்ஸ்மேனும் இருப்பது அணிக்கு வலு சேர்க்கும். ஆடுகளத்தின் தன்மையை பார்த்து, 11 பேர்கொண்ட அணி கடைசி நேரத்தில் தீர்மானிக்கப்படும். அணியில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து எதுவும் கூறமுடியாது. மழையால் ஆட்டம் கைவிடப்படுவதை நாம் எதுவும் செய்ய முடியாது. 22 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்ற இந்திய அணி மழையால் 1 நாள் மட்டுமே ஆடிய வரலாறும் நம்மிடம் உள்ளது.(1993-94ல் நடைபெற்ற போட்டி).
தென் ஆப்பிரிக்க கேப்டன் ஆம்லா, கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை. ஆனால் அவரை நாங்கள் குறிவைத்து செயல்படவில்லை. பொதுவாக எதிரணிகள், கேப்டனை குறிவைத்துதான் திட்டம் தீட்டுவார்கள். நானே அதை அனுபவித்துள்ளேன்.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயத்தால் ஆடாமல் இருப்பது குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. அவருக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் அதிக போட்டிகளில் ஆடியுள்ளனர். ரன்களையும் குவித்துள்ளோம். எல்லா பந்து வீச்சாளரும் ஒன்றுதான்.
விக்கெட்டுகள் வீழ்த்துவதை விட ரன் சேர்ப்பதுதான் பிரச்சினை: ஆம்லா
விக்கெட்டுகள் வீழ்த்துவதை விட ரன் சேர்ப்பதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது தென் ஆப்பிரிக்க கேப்டன் ஆம்லா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: நாக்பூர் டெஸ்டில் ஸ்டெய்ன் விளையாட வாய்ப்பில்லை. அவர் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக நான் கருதவில்லை. உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் அணியில் இல்லாதது பின்னடைவுதான். இருப்பினும், இதை சமாளிக்கும் அளவு தகுதி வாய்ந்த பந்துவீச்சாளர்கள் எங்களிடத்தில் உள்ளனர்.
இந்த தொடரில் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை நாங்கள் இன்னும் வெளிப்படுத்தவில்லை. நாக்பூரில் சிறப்பாக விளையாடி ரன் குவித்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. விக்கெட்டுக்களை வீழ்த்துவதை விட ரன் சேர்ப்பதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது.
ஆடுகளம் சிறப்பானதாக தோன்றுகிறது. இந்தியாவின் ஆடுகளங்கள் துணைக்கண்டங்களில் உள்ளது போன்றது தான். இந்தியா முதல் டெஸ்டிலும், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடனே விளையாடியது. அதனால் அது புதிதல்ல. அஸ்வின் சிறப்பாக பந்து வீசுகிறார்.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணியில் உள்ள மற்ற சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாகவே செயல்படுகின்றனர். எங்களது அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இம்ரன் தகிர், ஹார்மர் நன்கு வளர்ச்சி கண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
தனது மோசமான பார்ம் குறித்து கூறும்போது, "ஒருநாள் போட்டி, டெஸ்ட் ஆகியவற்றில் ரன்குவிக்கவே விரும்புகிறேன். இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளது. இதில் ரன்கள் குவிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
மிஸ்ராவுக்கு வாய்ப்பு?
சுழலுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதால் இந்திய அணியின் ஆடும் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா சேர்க்கப்படலாம் எனத்தெரிகிறது. அவர் இடம்பெறும்பட்சத்தில் வருண் ஆரோண் அல்லது ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்படலாம். இந்த மைதானத்தில் ரஞ்சி கோப்பையின் 6 ஆட்டங்களில் உமேஷ் யாதவ் 16 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதனால் அவரது பெயரும் பரிசீலிக்கப்படக்கூடும்.