பெர்த் டெஸ்ட் போட்டியில் இன்று 290 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து முச்சதத்தை நழுவ விட்ட ராஸ் டெய்லர் ஆஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை எட்டிய அயல்நாட்டு வீர்ர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
290 ரன்களில் 43 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று 235 நாட் அவுட் என்று இருந்த ராஸ் டெய்லர் 290 ரன்கள் எடுத்து 111 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். ஆனால் முச்சதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், நேதன் லயன் வீசிய ஆஃப் ஸ்டம்ப் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்தார், பந்து மட்டையில் சரியாக சிக்காமல் டாப் எட்ஜ் எடுக்க டீப் ஸ்கொயர் லெக்கில் பதிலி வீரர் ஜானி வெல்ஸின் நன்றாக கணித்துப் பிடித்த கேட்சுக்கு வெளியேறினார்.
ராஸ் டெய்லருக்கு முன்பாக 1903-ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் டிப் பாஸ்டர் எடுத்த 287 ரன்களே அயல்நாட்டு பேட்ஸ்மேன் ஒருவர் ஆஸ்திரேலிய மண்ணில் எடுத்த அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். பிறகு இதே சிட்னியில் பிரையன் லாரா 277 ரன்களை எடுத்தார்.
மேலும், மற்றொரு நியூஸிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் 2003-ம் ஆண்டு சரா ஓவல் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக எடுத்த 274 ரன்களே அயல்நட்டில் நியூஸி வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கையாக இருந்தது. தற்போது ராஸ் டெய்லர் அதனை முறியடித்தார்.
அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த ஒரு மைதானத்திலும் எடுத்த அதிகபட்ச தனிப்பட்ட வீரர் ஸ்கோர் 364. இதனை சாதித்தவர் லென் ஹட்டன், ஓவல் டெஸ்ட் போட்டியில் 1938-ம் ஆண்டு அவர் இந்த ஸ்கோரை அடித்தார். இதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோர், ஒரே முச்சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் டெய்லரின் 290 ரன்கள் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மார்டின் குரோவ் 117 இன்னிங்ஸ்களில் 5,000 டெஸ்ட் ரன்கள் எடுத்த நியூஸிலாந்து சாதனைக்கு அடுத்தபடியாக தற்போது ராஸ் டெய்லர் 120 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்கள் எடுத்து சாதித்துள்ளார்.
பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 559 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து கேன் வில்லியம்ன்சன் (166) மற்றும் ராஸ் டெய்லர் (290) ஆகியோர் 3-வது விக்கெட்டுக்காக 265 ரன்கள் சேர்க்க 624 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 119 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஜான்சன் 28 ஓவர்களில் 157 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றி சொதப்பினார். லயன் 3 விக்கெட்டுகள்.
தொடர்ந்து இன்று 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா ஒரு மாறுதலுக்காக ஜோ பர்ன்ஸ் (0), டேவிட் வார்னர் (24) ஆகியோரை தொடக்கத்தில் இழந்தது. ஆனால் அதனால் என்ன? ஸ்மித் 131 நாட் அவுட், வோஜஸ் 101 நாட் அவுட் ஆஸ்திரேலியாவை மீண்டும் தங்களது அதிரடிப் பாதைக்கு இட்டு வந்துள்ளது. ஆஸ்திரேலியா 193 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை ஆட்டத்தின் கடைசி நாள், நிச்சயம் டிராவுக்கு ஆடமாட்டார் ஸ்மித், 300 ரன்கள் அல்லது அதற்கு சற்று கூடக்குறைய முன்னிலை பெற்று டிக்ளேர் செய்து பெர்த் டெஸ்ட் போட்டிக்கு உயிரூட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.