வருண் சக்ரவர்த்தி: படம் உதவி | ட்விட்டர். 
விளையாட்டு

இங்கிலாந்து டி20 தொடர்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி நீக்கம்? ராகுல் திவேட்டியாவும் சந்தேகம்; காரணம் என்ன? 

பிடிஐ

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியில் வீரர்களுக்கு நடத்தப்படும் உடற்தகுதி பரிசோதனை, யோயோ டெஸ்ட் ஆகியவற்றில் வருண் சக்ரவரத்தி தோல்வி அடைந்ததால், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் 'லெக் ஸ்பின்னர்' ராகுல் சஹர் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாகப் பந்துவீசியதை அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தோள்பட்டை வலி காரணமாக வருண் சக்ரவர்த்தி தொடருக்கு வரவில்லை, அவருக்கு பதிலாக நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டிருந்தார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்று வருண் சக்ரவர்த்தி வீரர்களுக்கு நடத்தப்படும் உடற்தகுதி பரிசோதனை, யோயோ டெஸ்ட் ஆகியவற்றில் பங்கேற்றார். இதில் யோயோ டெஸ்ட்டில் வருண் சக்ரவர்த்தி தேறவில்லை.

யோயோ டெஸ்ட்டில் 2 கி.மீ. தொலைவைப் பந்துவீச்சாளர்கள் 8.15 நிமிடங்களில் 2 முறை ஓடிக் கடக்க வேண்டும். இந்தப் பரிசோதனையில் வருண் சக்ரவர்த்தி தேறவில்லை என்பதால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், 2-வது முறையாக வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பை இழக்கிறார்.

இந்திய அணியில் நெட் பவுலராக இடம் பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர், சக்ரவர்த்திக்கு பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “தோள்பட்டை காயத்தால் ஆஸ்திரேலிய டி20 தொடரில் வருண் சக்ரவர்த்தியால் பங்கேற்க முடியவில்லை. ஆனால், தற்போது உடல்நலன் தேற்விட்டதால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் வருண் சக்ரவர்த்திக்கு நடத்தப்பட்ட உடற்தகுதி பரிசோதனையில் அவர் இயல்பாக பந்தை எடுத்து எறிந்தார்.

ஆனால், வீரர்கள் உடற்தகுதிக்காக நடத்தப்படும், யோயோ டெஸ்ட்டில் வருண் தேறவில்லை. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த வருண் சக்ரவர்த்தியை சேத்தன் சர்மா தேர்வுக்குழுவினர் ஏன் தேர்வு செய்தார்கள் எனத் தெரியவில்லை.

முஸ்டாக் அலி தொடரின்போது வருண் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்துவிட்டார். ஆனால், விஜய் ஹசாரே கோப்பையில் இதுவரை விளையாடவில்லை. பின்னர் எவ்வாறு வருண் சக்ரவர்த்தி உடல்நலத்துடன் இருப்பதாகக் கருதி அவரை அணிக்குத் தேர்வு செய்தார்கள்.

தேர்வாளர்களுக்கு வருண் சக்ரவர்த்தி நல்ல பாடம். ஒரு வீரர் தனது உடற்தகுதியைப் பராமரிக்காவிட்டால், அவர் பந்துவீச்சை மட்டும் வைத்து தேர்வு செய்வது இயலாது” எனத் தெரிவித்தனர்.


இதற்கிடையே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ராகுல் திவேட்டியாவும் இந்திய அணிக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் நகரிலிருந்து புறப்பட்டு அகமதாபாத்தில் உள்ள இந்திய அணியோடு திவேட்டியா இணைந்துவிட்டார்.

ஆனால், அவருக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட யோயோ டெஸ்ட்டில் திவேட்டியா தோல்வி அடைந்தார். ஆனால், அவருக்கு 2-வது கட்டமாக யோயோ டெஸ்ட் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேறாவிட்டால் திவேட்டியா நெட் பவுலராக மட்டுமே அணியில் இருப்பார் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT