இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தமிழக வேகப்பந்துவீச்சாளர் டி. நடராஜன் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது.
நடராஜனுக்கு ஏற்பட்ட தோள்பட்டை, முழங்கால் காயத்தால், அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் இருப்பதால், அவர் டி20 தொடரில் விளையாடுவாரா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து, ஆஸ்திரேலியத் தொடருக்கு 'நெட் பவுலராக' நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஆஸ்திரேலியா சென்றபின், ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்றிலும் அறிமுகமாகி நடராஜன் கலக்கி ஜொலித்தார்.
டி20 தொடரை இந்திய அணி வெல்வதற்கு நடராஜன் முக்கியப் பங்காற்றினார். பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட்டிலும் நடராஜன் பந்துவீச்சு துருப்புச் சீட்டாக இருந்தது. இதையடுத்து இந்தியா திரும்பிய நடராஜனுக்கு, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், டி20 தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக தமிழக அணியிலிருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் வரும் 12-ம் தேதி அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க இருக்கிறது. இந்தச் சூழலில் நடராஜனுக்கு தோள்பட்டையிலும், முழங்காலிலும் லேசான காயம் ஏற்பட்டதையடுத்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
நடராஜனுக்கான பந்துவீச்சு பரிசோதனை, பயிற்சி, உடற்தகுதி சோதனை இன்னும் நிறைவடையாததால், டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய கிரிக்கெட் அகாடெமி வட்டாரங்கள் கூறுகையில், “நடராஜனுக்கான தோள்பட்டை, முழங்கால் காயம் முழுமையாக குணமாகவில்லை. அவர் உடல் தகுதி பெற்றபின் அணிக்கு அனுப்பி வைக்கப்படுவார். டி20 தொடர் முழுவதும் அவர் விளையாடமாட்டார் எனச் சொல்ல முடியாது. சில போட்டிகளில் அவர் பங்கேற்காமல் போக வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.