ஃபேபியன் ஆலன் 19-வது ஓவரில் அடித்த 3 சிக்ஸர்கள் ஆட்டத்தையே மாற்றியது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் மே.இ.தீவுகள் அணி வென்றது.
ஆஸ்பர்ன் நகரில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மே.இ.தீவுகள் அணி.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது. 132 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19-வது ஓவரில் அதிரடியாக ஆடிய ஃபேபியன் ஆலன் 3 இமாலய சிக்ஸர்களை அடித்து அணியை எளிதாக வெற்றி பெற வைத்தார்.
இலங்கை அணியின் தரமான சுழற்பந்துவீச்சால், மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் வரிசை மடமடவெனச் சரிந்தது. 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எனும் இக்கட்டான நிலையில் இருந்தது. ஆனால், கடைசி 18 பந்துகளில் 27 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது.
ஃபேபியன் ஆலன், ஹோல்டர் களத்தில் இருந்தனர். 18-வது ஓவரில் இருவரும் சேர்ந்து 7 ரன்கள் எடுத்தனர். கடைசி இரு ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்தான் ஆலன் அதிரடியை வெளிப்படுத்தினார்.
தனஞ்செயா வீசிய 19-வது ஓவரில் முதல் பந்தில் ஒரு சிக்ஸரை ஃபேபியன் ஆலன் விளாசினார். அதன்பின் 3-வது பந்தில் ஒரு சிக்ஸரையும், கடைசிப் பந்தில் ஒரு சிக்ஸரையும் விளாசி ஆட்டத்தை முடித்துவைத்தார். ஆட்ட நாயகன் விருதும் ஃபேபியன் ஆலனுக்கு வழங்கப்பட்டது.
ஹோல்டர் 14 ரன்களுடனும், ஃபேபியன் ஆலன் 6 பந்துகளில் 21 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மே.இ.தீவுகள் அணியைப் பொறுத்தவரை சேஸிங் செய்ய மிகக் குறைவான ஸ்கோர்தான் என்ற போதிலும் இலங்கை அணியின் தனஞ்செயா, சண்டகன், டிசில்வா, குணதிலகா எனச் சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்தனர்.
தொடக்க வீரர்கள் லூயிஸ், சிம்மன்ஸ், நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். லூயிஸ் (21) ரன்களிலும், சிம்மன்ஸ் (26) ரன்களிலும் டி சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. கெயில் (13), பொலார்ட் (0), பூரன் (23), பாவெல் (7) பிராவோ (0) என வரிசையாக வீழ்ந்தனர். முன்னணி பேட்ஸ்மேன்களான கெயில், பொலார்ட், பூரன் ஆகியோர் சோபிக்கத் தவறியதாலேயே மிகவும் போராடி வெற்றி பெற வேண்டிய நிலை மே.இ.தீவுகள் அணிக்கு ஏற்பட்டது.
இலங்கை தரப்பில் சண்டகன் 3 விக்கெட்டுகளையும், சமீரா, டி சில்வா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக, இலங்கை அணி முதலில் பேட் செய்தது. மே.இ.தீவுகள் வேகப்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இலங்கை அணியின் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டை இழந்தனர். தொடக்க வீரர்கள் குணதிலகா (9), நிசாங்கா (5), டிக்வெலா (4), மேத்யூஸ் (11) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி தடுமாறியது.
5-வது விக்கெட்டுக்கு சந்திமால், பந்தாரா ஜோடி இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய சந்திமால், 42 பந்துகளில் அரை சதம் அடித்தார். சந்திமால் 54 ரன்களிலும், பந்தாரா 44 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மே.இ.தீவுகள் தரப்பில் ஃபேபியன் ஆலன், ஹோல்டர், சின்க்ளேயர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.