விளையாட்டு

இந்த ஆண்டில் 10வது முறையாக இறுதிபோட்டியில் சானியா ஜோடி

செய்திப்பிரிவு

டபிள்யூடிஏ பைனல்ஸ் என்று அழைக்கப்படும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் உலகின் 8 முன்னணி வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் உலகின் 8 முன்னணி ஜோடிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதன் ஒற்றையர் பிரிவு அரையிறு தியில் நேற்று போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா எதிர்த்து ஆடினார். இதில் ரத்வன்ஸ்கா 6-7, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் சுமார் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்றது. ரத்வன்ஸ்கா இந்த ஆண்டில் பெற்ற 50வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா- செக்குடியரசின் பெட்ரா விட்டோவா மோதினர். இதில் பெட்ரா விட்டோவா 6-3, 7-6 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார். இறுதி போட்டியில் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா-பெட்ரா விட்டோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இரட்டையர் பிரிவு அரையிறுதியில் சானியா மிர்சா(இந்தியா)- மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சீன தைபேவின் சான் ஹாவ் சின்-சான் யூங் ஜான் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சானியா ஜோடி 6-4, 6-2 என்ற நேர்செட்டில் எளிதாக வெற்றி பெற்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. சானியா மிர்சா- மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இந்த ஆண்டில் இறுதி போட்டிக்குள் நுழைவது இது 10வது முறையாகும்.

இந்த ஜோடி இந்த ஆண்டில் 8 தொடர்களில் கோப்பை வென்றுள்ளது. இதில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டமும் அடங்கும். டபிள்யூடிஏ பைனல்ஸில் சாம்பியன் பட்டம் வென்றால் ஹிங்கிஸூக்கு சாதனையாக அமையும். அவர் வெல்லும் 50வது கோப்பையாக இருக்கும். இந்த சாதனையை ஏற்கெனவே மார்ட்டினா நவரத்திலோவா உள்ளிட்ட 15 பேர் படைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT