2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தடகள அணியினர் சோபிக்க வாய்ப்பில்லை என்று முன்னாள் தடகள சாம்பியன் மில்கா சிங் கூறியுள்ளார்.
ஆதிவாசிகள், பழங்குடியினர் மற்றும் சமூகத்தில் நலிவுற்ற பிரிவினரை ஊக்கப்படுத்தி தடகள வீரர்களை உருவாக்கினால் மட்டுமே இந்தியாவினால் சாம்பியன்களை பெற்றுத் தர முடியும் என்கிறார் மில்கா சிங்.
இது குறித்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூயிருப்பதாவது:
"குழந்தைகளாக இருக்கும் போதே வீட்டில் ஆடம்பரத்தையும், சுகத்தையும் அனுபவித்தவர்களுக்கு ஊக்கம் இருக்காது. இந்த விஷயத்தில் ஏழைகளுக்கு வேறு ஒரு மனநிலை உள்ளது. அவர்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் ஆவலும் வேட்கையும் உள்ளது.
ஏற்கெனவே இருக்கும் பயிற்சியாளர்கள் காலம் முடிவடையும் போது அரசு குறைந்தது 4-5 ஆண்டுகள் நீடிக்கும் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்று நான் கூறிய போது நிறைய புருவங்கள் உயர்ந்தன. அப்போதுதான் அவர்களுக்கும் பொறுப்பு கூடும்.
ஆம். பொறுப்பு என்பது தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள், தடகள கூட்டமைப்பு என்று அனைவருக்கும் உள்ளது. இப்படிச் செய்தால், தோல்விகள் அடையும் போது அரசின் மீது குறைகூற முடியாது. எங்கள் காலம் போல் அல்லாமல், இப்போது தடகள வீர்ர்களுக்கு அனைத்தும் கிடைக்கின்றன. பயிற்சி திட்டங்கள், முகாம்கள், நிறைய தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு என்று இவர்களிடத்தில் வாய்ப்புக்குப் பஞ்சமில்லை.
நான் விளையாடிய காலம் அல்லது ஹாக்கி லெஜண்ட் தயான் சந்த் மற்றும் பல்பீர் சிங் காலத்தில் எங்களிடம் முறையான ஷூ கூட கிடையாது. ஆனாலும் எங்களால் திறமையை நீருபிக்க முடிந்தது.
எனவே தடகள வீர்ர்கள் நாட்டின் கவுரவத்தை முன்னிலைப் படுத்தி, இதனால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற நலன்களைப் பின்னுக்கு தள்ளி செயல்பட்டால்தான் முடிவுகள் ஊக்கமளிப்பதாக இருக்கும்.
எவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு நாம் சுதந்திரம் பெற்றோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பிறகு பிரிவினை கலவரங்கள் நடைபெற்றது, இதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஆகவே தேசிய பெருமையை நாம் உயர்த்திப் பிடிப்பதே நம் கடமை.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு கூட இந்திய தடகள அணி முன்னேறும் வாய்ப்பில்லை. பிறகுதான் பதக்கங்களை வெல்வது பற்றி பேச முடியும். தற்போது இருக்கும் நடைமுறையில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்புகளே குறைவுதான்.
இவ்வாறு கூறியுள்ளார் மில்கா சிங்.