அபாரமான சுழற் பந்துவீச்சு மற்றும் நிதானமான பேட்டிங் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டநேர முடிவில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்சில், 22 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது, தவண் 62 பந்துகளில் 45 ரன்களுடனும், முரளி விஜய் 73 பந்துகளில் 28 ரன்களும் எடுத்திருந்த நிலையில் களத்தில் இருந்தனர்.
10 விக்கெட்டுகள் கைவசம் உள்ள இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் வெறும் 134 ரன்கள் மட்டுமே பின்னடைவில் உள்ளது.
இந்தியச் சுழலில் 214 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா
இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் இன்று காலை துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் போட்டியைப் போலவே இன்றும் இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் ஆதிக்கம் செலுத்தினர்.
டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் இந்தியாவின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க தென் ஆப்பிரிக்க வீரர்கள் சற்றே தடுமாறினர். வேகப்பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா முதல் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 8-வது ஓவரை அஸ்வின் வீசினார். 2-வது பந்தில் துவக்க வீரர் வான் ஸைலை பெவிலியனுக்கு அனுப்பிய அஸ்வின், தொடர்ந்து ஆட வந்து டூ ப்ளெஸ்ஸியை அதே ஓவரின் 5-வது பந்தில் வீழ்த்தினார்.
ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் விழ, தென் ஆப்பிரிக்க வீரர்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் ஆட ஆரம்பித்தனர். அடுத்த சில ஓவர்களில் வருண் ஆரோன் வேகத்தில் ஆம்லா ஸ்ட்ம்பை பறிகொடுக்க தென் ஆப்பிரிக்க அணி உணவு இடைவேளையின் போது 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இடைவேளை முடிந்து முதல் ஓவரை வீசிய ஜடேஜா எல்கர் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு முனையில், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் டி வில்லியர்ஸ் நிலைத்து ஆடிவர, மறுமுனையில் வீரர்கள் அவருக்கு துணை நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
டுமினி 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டிவில்லியர்ஸ் 85 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலுக்கு வீழ்ந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் தென் ஆப்பிரிக்கா 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.