ரவிச்சந்திரன் அஸ்வின் : கோப்புப்படம் 
விளையாட்டு

ஐசிசியின் மாதாந்திர சிறந்த வீரர்: அஸ்வின், ஜோ ரூட், மேயர்ஸ் பெயர்கள் பரிந்துரை

பிடிஐ

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கைல் மேயர்ஸ், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் விளையாடியுள்ளார். இதில் சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 106 ரன்கள் அடித்து, 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அகமதாபாத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வின் 176 ரன்கள் சேர்த்து 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராகப் பரிந்துரைக்கப்படுகிறார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் 333 ரன்கள் பெற்று, 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதையடுத்து ரூட் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 218 ரன்களை ரூட் குவித்தார்.

மே.இ.தீவுகள் அணியில் அறிமுகமான வீரர் கைல் மேயர்ஸ் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 210 ரன்கள் சேர்த்து 395 ரன்களை சேஸிங் செய்யக் காரணமாக அமைந்தார். டெஸ்ட் தொடரை வெல்வதற்குக் காரணமாக மேயர்ஸ் அமைந்தார் என்பதால், அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மகளிர் பிரிவில் இங்கிலாந்து வீராங்கனைகள் டாமி பீமாண்ட், நாட் சிவர், நியூஸிலாந்து வீராங்கனை ப்ரூக் ஹாலிடே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT