இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுநாள் தொடங்க இருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டித் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஒருநாள் தொடரிலிருந்தும் விலக உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அகமதாபாத்தில் வரும் 4-ம் தேதி தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா முக்கியத் துருப்புச் சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தனிப்பட்ட காரணங்களால் பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்கக் கேட்டுக்கொண்டதால், அவரை விடுவித்துள்ளோம் என்று பிசிசிஐ கடந்த வாரத்தில் தெரிவித்தது.
அகமதாபாத்தில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டிக்கு பும்ரா தேவை என்பதால், சேப்பாக்கத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டி20 அணியிலும் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் ஒருநாள் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "பும்ரா ஆஸி. தொடரிலிருந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரை ஏறக்குறைய 180 ஓவர்கள் வரை வீசிவிட்டார். இனிமேல் தொடர்ந்து அவருக்கு வேலைப்பளுவை அதிகரிக்க முடியாது என்பதால், டி20 தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஒருநாள் தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை" எனக் காரணமாகக் கூறப்பட்டது.
ஆனால், அகமதாபாத் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானம் என்பதால், 3-வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்குப் போதுமான ஓவர்கள் வழங்கப்படவில்லை, ஃபீல்டிங் மட்டுமே செய்தார். ஆதலால், பும்ராவுக்கு கூடுதல் ஓய்வு தேவை என்பதால், அவருக்கு ஒருநாள் தொடரிலும் ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய இங்கிலாந்துக்கு எதிராக நடக்கும் டி20, ஒருநாள் தொடர்தான் கடைசி வாய்ப்பு. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள்தான் டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இடம் பெறுவார்கள். அணியில் பும்ராவின் இடம் உறுதி செய்யப்பட்டது. அவர் இடம் பெறுவது உறுதி என்பதால், மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால், ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஒருநாள் தொடரில் பும்ரா விளையாடவில்லை என்றால், அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, நடராஜன் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.