விளையாட்டு

ராஸ் டெய்லர் சாதனைக்கு கை கொடுத்து பாராட்டாத ஆஸி. வீரர்கள்: வர்ணனையாளர்கள் சாடல்

இரா.முத்துக்குமார்

பெர்த் டெஸ்ட் போட்டியில் 290 ரன்கள் எடுத்து 111 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராஸ் டெய்லரை எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரும் பாராட்டவில்லை, அவர் கையை குலுக்கி வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தின் வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான டர்க் நேனஸ் சாடியுள்ளார்.

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்டில் வெளியான செய்தி வருமாறு:

பெர்த் டெஸ்ட் போட்டியில் 290 ரன்கள் எடுத்த ராஸ் டெய்லர், ஆஸ்திரேலிய மண்ணில் அயல்நாட்டு வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக அதிக டெஸ்ட் ரன்னை ஒரு இன்னிங்சில் எடுத்த 2-வது வீரர் என்ற ஒரு அரிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

அவர் 4-ம் நாள் ஆட்டத்தில் நேதன் லயன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் கூட டெய்லரின் மாரத்தன் இன்னிங்ஸிற்காக அவரிடம் சென்று கை கொடுக்கவில்லை.

அப்போது ஏபிசி-யில் வர்ணனை செய்து கொண்டிருந்த டர்க் நேனஸ், “290 ரன்களை எடுத்துள்ளார், ஆஸ்திரேலிய முகாமிலிருந்து ஒருவர் கூட டெய்லரிடம் சென்று கை கொடுக்கவில்லை.

இந்த ஆட்டம் விளையாடப்படும் உணர்வை நினைத்துப் பார்க்கும் போது எனது ஏமாற்றத்தை வெளியிடாமல் இருக்க முடியவில்லை. ஒருவர் கூட டெய்லரிடம் சென்று அவரது கையை குலுக்கவில்லை. ஒரு வீரர் அபாரமான ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டு வெளியேறுகிறார், அதனை பாராட்டக்கூட மனம் வராதது பயங்கரமான ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்பாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கற்றுக் கொடுக்கிறோம், பாராட்டக் கற்றுக் கொடுக்கிறோம் ஆனால் மைதானத்தில் அதைக் கடைபிடித்தால் என்ன ஆகிவிடப்போகிறது? ஆனால் இப்படி அடிக்கடி நடப்பது பார்க்க நன்றாக இல்லை” என்று சாடினார்.

முன்னாள் நியூஸிலாந்து அதிரடி வீரர் மார்க் கிரேட்பேட்ச் கூறும்போது, “இது அவமானகரமானது; ஆனால் இது ஆஸ்திரேலிய வீரர்களின் குணாதிசயத்தை நமக்கு தொகுத்தளிக்கிறது. அவர்கள் மிகவும் அராஜகமானவர்கள்.

டேவிட் வார்னர் முதல் இன்னிங்சில் 253 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த போது நியூஸிலாந்து வீரர்களில் பலர் ஓடி வந்து வார்னரின் கையை குலுக்கினர்” என்றார்.

ஆனால், ராஸ் டெய்லர் இதனைக் கண்டு கொள்ளவில்லை, அவரிடம் இது பற்றி கேட்ட போது, “அவர்கள் நேதன் லயனையும் கேட்ச் பிடித்த வெல்ஸையும் பாராட்டச் சென்றனர். இரண்டாவதாக, நான் மைதானத்தின் வேறு ஒரு பகுதியில் பெவிலியனுக்கு வேகமாகச் சென்றேன், அதனால் பாராட்டவில்லை என்று கருத இடமில்லை, இதெல்லாம் தற்செயல்தான்” என்றார்.

SCROLL FOR NEXT