இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே புனேயில் நடக்க உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை மனதில் வைத்து புனேயில் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனத் தெரிகிறது. மேலும், போட்டியை புனேயிலிருந்து மும்பைக்கு மாற்றவும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் டி20 போட்டிகள் அனைத்தும் ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலேயே நடைபெறும். 3 ஒருநாள் போட்டிகளும் புனே நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மும்பை, புனே, மராத்வாடா மண்டலம், அமராவதி, யாவத்மால் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் புனேயில் நடத்தப்படும் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ரசிகர்கள் இன்றி நடத்த பிசிசிஐ சார்பில் ஆலோசிக்கப்படுகிறது. இல்லாவிட்டால், போட்டி நடத்தப்படும் இடத்தை மும்பைக்கு மாற்றவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் " கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் புனேயில் நடக்கும் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இரு போட்டிகள் புனேயிலும், கடைசி போட்டி மும்பையில் நடத்தலாமா அல்லது அனைத்துப் போட்டிகளையும் மும்பையில் நடத்தலாமா என்பதுகுறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேசியபின் இறுதி செய்யப்படும்.
ஒருவேளை மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவல் அடுத்துவரும் நாட்களில் அதிகமாக இருந்தால், ஒருநாள் தொடர் முழுவதும் அகமதாபாத் நகருக்கே மாற்றப்படலாம். ஆனால், எந்த முடிவும் இப்போதுள்ள நிலையில் எடுக்கப்படவில்லை. அனைத்து வாய்ப்புகளையும் ஆலோசித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.