புஸவ்
சீனாவில் புஸவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-13 21-18 என்ற நேர்செட்டில் சீனாவின் வாங் இஹானை தோற்கடித்தார். இந்த ஆட்டம் வெறும் 41 நிமிடங்களில் முடிவடைந்தது. இன்று நடைபெறும் இறுதிபோட்டியில் சாய்னா, தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள சீனாவின் லி ஜூருயை எதிர்கொள்கிறார்.
பாக். தோல்வி
அபதாபி
பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் அபுதாபியில் 2வது ஒருநாள் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 283 ரன் குவித்தது. ஹேல்ஸ் 109 ரன் விளாசினார். 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 45.5 ஓவரில் 188 ரன்களுக்கு சுருண்டது.
அதிக பட்சமாக சர்ப்பிராஸ் அகமது 64 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 4, வில்லே 3 விக்கெட் வீழ்த்தினர். 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சமநிலையில் உள்ளது.
மாஸ்டர்ஸ் டி 20 தொடருக்கு அனுமதி
துபை
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் ஷாம்பியன் லீக் டி 20 தொடர் போட்டிகளை அடுத்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. எனினும் இதனை ஐசிசி முறைப்படி அறிவிக்கவில்லை. ஆனால் போட்டிக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போட்டிகள் ஜனவரி 22ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இடம் பெறும் 90 வீரர்களும் இம் மாதம் 27ம் தேதி துபையில் நடைபெறும் ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.