பிரித்வி ஷாவின் இரட்டைச் சதம், சூர்யகுமார் யாதவின் சதம் ஆகியவற்றால், ஜெய்ப்பூரில் நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் குரூப் டி பிரிவில் புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் குவித்தது.
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிரித்வி ஷா தன்னை நீக்கியது தவறு என்பதை நிரூபித்துள்ளார்.
ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்கள முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் குவித்தது.
அதிரடியாக பேட் செய்த பிரித்வி ஷா 152 பந்துகளில் 257 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 31 பவுண்டரிகள் அடங்கும். மற்றொரு பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ் 58 பந்துகளில் 133 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள் அடங்கும்.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் தனி ஒரு பேட்ஸ்மேன் பதிவு செய்த உயர்ந்தபட்ச ஸ்கோர் என்பதை பிரித்வி ஷா பதிவு செய்தார். இந்தத் தொடரில் பிரித்வி ஷா அடிக்கும் 2-வது சதம் இதுவாகும்.
லிஸ்ட் ஏ போட்டிகளில் அடிக்கப்பட்ட 4-வது அதிகபட்ச ஸ்கோர் மும்பை அணி இப்போது பதிவு செய்த ஸ்கோராகும். இதற்கு முன் இந்திய ஏ அணி கடந்த 2018-ல் லீசீஸ்டர் அணிக்கு எதிராக 4 விக்கெட் இழப்புக்கு 458 ரன்கள் சேர்த்தது அதிகபட்சமாகும் .
இந்தப் போட்டியில் மயங்க் அகர்வாலுடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு பிரித்வி ஷா 132 ரன்கள் சேர்த்து 221 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குமுன் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் கோவா அணிக்கு எதிராக சஞ்சு சாம்ஸன் அடித்த 219 ரன்கள்தான் அதிகபட்சமாக இருந்தது. அதை பிரித்வி ஷா 257 ரன்கள் (நாட் அவுட்) முறியடித்துவிட்டார். விஜய் ஹசாரே கோப்பையில் அடிக்கப்படும் 4-வது இரட்டைச் சதம் இதுவாகும். ஏ தரப்போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த 8-வது இந்திய வீரர் எனும் பெருமையை பிரித்வி ஷா பெற்றார்.
டாஸ் வென்ற புதுச்சேரி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். வழக்கமான கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்ததால், பிரித்வி ஷா கேப்டன் பொறுப்பை ஏற்றார். தொடக்கத்தில் இருந்தே பிரித்வி ஷா அதிரடியாக ஆடத் தொடங்கியதால் ரன் ரேட் 6 ரன்களுக்கு மேல் சென்றது. நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் 10 ரன்களில் வெளியேறினார்.
2-வது விக்கெட்டுக்கு வந்த ஆதித்யா தாரே 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 153 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு பிரித்வி ஷாவுடன், சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இருவரும் புதுச்சேரி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டனர். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் நான்கு திசைகளிலும் இருவரும் பறக்கவிட்டனர்.
அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 152 பந்துகளில் 227 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். துணையாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 58 பந்துகளில் 133 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள் அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு பிரித்வி ஷா, சூர்யகுமார் இருவரும் சேர்ந்து 201 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் சேர்த்தது மும்பை அணி. புதுச்சேரி அணித் தரப்பில் 8 பந்துவீச்சாளர்கள் பந்து வீசினர். இதில் 36 வயதான பங்கஜ் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மற்ற பந்துவீச்சாளர்களான 41 வயதான சந்தான மூர்த்தி 92 ரன்கள், சாகர் திரிவேதி 99, சாகர் உதேசி 81 ரன்கள் என ரன்களை வாரி வழங்கினர்.