பிரதிநிதித்துவப் படம். 
விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை; பிஹார் வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி: அணி வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை

பிடிஐ

விஜய் ஹசாரே கோப்பையில் பங்கேற்று வரும் பிஹார் அணியில் ஒரு வீரருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக உள்நாட்டு கிரிக்கெட்டில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இதற்கு முன் நடந்த முஷ்டாக் அலி டி20 கோப்பைப் போட்டியில் பயோ பபுள் உருவாக்கப்பட்டு பல்வேறு மாநில வீரர்ககள் விளையாடினர். அப்போது எந்த வீரருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இப்போது முதல் முறையாக பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிஹார் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் இன்று மாலை வர உள்ளன.

இதுகுறித்து பிஹார் கிரிக்கெட் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிஹார் அணியில் ஒரு வீரர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான். அந்த வீரர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அந்த வீரர் தற்போது பெங்களூரில் உள்ளதால் எங்கும் பயணிக்க முடியாது. மற்ற வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இன்று மாலை முடிவுகள் வரும்" எனத் தெரிவித்தார்.

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் எலைட் குரூப் சி பிரிவில் பிஹார் அணி இருக்கிறது. லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவில் நடந்து வருகின்றன. உத்தரப் பிரதேச அணியுடன் நாளை பிஹார் அணி மோத இருந்த நிலையில் கரோனாவில் ஒரு வீரர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் திட்டமிட்டபடி நாளை போட்டி நடைபெறும் என்று நம்புவதாக பிஹார் கிரிக்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம் அணிகளில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனைக்குப் பின் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

அனைத்து வீரர்களும் பயோ பபுள் சூழலுக்குள் கிரிக்கெட் விளையாடி வரும்போதும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT