இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், தனது மகள் குறித்து நெகிழ்ச்சியான பதிவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வறுமையான குடும்பச் சூழல், வாய்ப்புக்காகக் காத்திருந்து நடத்திய போராட்டம், ரப்பர் பந்தில் பயிற்சி எனப் பாதைகள் முழுவதும் முட்களுடன் பயணித்து நடராஜன் இந்திய அணிக்குள் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணிக்குள் நெட் பந்துவீச்சாளராக இடம் பெற்ற நடராஜன், ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர் வரை தனது தனித்திறமையான பந்துவீச்சால் முன்னேறியது குறித்து ஐசிசியும், பிசிசிஐயும் பாராட்டு தெரிவித்துள்ளன. தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போதைய சூழலில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக அறியப்படுகிறார் நடராஜன். இந்த நிலையில் தனது 4 மாதக் குழந்தையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நடரஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் தேவதை ஹன்விகா. நீதான் எங்களுடைய சிறந்த பரிசு. வாழ்க்கை இவ்வளவு அழகாக இருப்பதற்குக் காரணம் நீதான். உன் பெற்றோராக எங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.