விளையாட்டு

ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கி: பாக்.கை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

செய்திப்பிரிவு

மலேசியாவில் நடைபெற்று வந்த ஆசியக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் 4 கோல்கள் அடித்தார்.

8-வது ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வந்தது. அரையிறுதியில் ஜப்பானை வீழ்த்திய இந்தியாவும், தென்கொரிய அணியை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

நேற்றைய இறுதிப் போட்டியில், இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் பெனல்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 15-வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனல்டி கார்னர் வாய்ப்பையும் ஹர்மன்பிரீத் கோலாக்கினார். இதையடுத்து ஆக்ரோஷமாக பதிலடி தரத் தொடங்கிய பாகிஸ்தான், 28-வது நிமிடத்தில் கோலடித்தது. முதல்பாதி ஆட்டம் முடிவதற்குள் ஹர்மன்பிரீத் மேலும் ஒரு பெனல்டி கார்னரை பயன்படுத்தி தனது ஹாட்ரிக் கோலை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்றது.

2-வது பாதியின் 44-வது நமிடத்தில் அர்மான் குரேஷியும், 50-வது நிமிடத்தில் மன்பிரீத்தும், 53-வது நிமிடத்தில் ஹர்மன் பிரீத்தும் கோலடித்தனர். இந்தியாவின் அடுத்தடுத்த கோல்களால் அரங்கத்தில் இருந்து இந்திய ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். 68-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் முகமது தில்பர் ஆறுதல் கோலடித்தார். இறுதியில் இந்திய ஆடவர் அணி 6-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி, ஆசியக் கோப்பையை வென்றது.

SCROLL FOR NEXT