உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மிக இளம் வயதில் (16 வயதில்) தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமைக்குரிய மனு பாகரின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 18).
சிறு வயதில், தான் படித்துவந்த பள்ளியில், அனில் ஜாகர் என்ற பயிற்சியாளரின் மேற்பார்வையில் மனு பாகர் பயிற்சி பெற்றுவந்தார். ஆனால் மனுவுக்கு 14 வயதாக இருக்கும்போது, முக்கிய போட்டிகளில் பங்கேற்கும் தருணத்தில், அவரது பயிற்சியாளர் வேலையை விட்டு நின்றுவிட்டார்.
பயிற்சியாளர் இல்லாத சூழ்நிலையிலும் 2017-ம் ஆண்டில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் மனு பாகர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து உலகக் கோப்பை உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ளார். இதுகுறித்து கூறும் அவர், “துப்பாக்கி சுடுதலின் அடிப்படைகள் தெரிந்ததால், என்னால் ஓரளவு சமாளிக்க முடிந்தது. பயிற்சியாளரின் மேற்பார்வையில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, தினமும் பல மணிநேரம் பயிற்சி செய்தேன். நாம் தீவிரமாக முயற்சி செய்தால் பயிற்சியாளர் இல்லாமல்கூட சாதிக்க முடியும் என்பதை இந்த காலகட்டத்தில் உணர்ந்துகொண்டேன்” என்றார்.
போட்டிகளின்போது இலக்கை சரியாக குறிபார்த்து சுடுவதற்கு மனதை ஒருநிலைப்படுத்துவது மிகவும் அவசியம். இதற்காக முக்கிய போட்டிகளுக்கு நடுவில் இசையைக் கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார் மனு பாகர். “போட்டிகளின்போது நான் எப்போதும் மற்ற வீரர்கள் எத்தனை புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள் என்பது பற்றி கவலைப்பட மாட்டேன். என்னைப் பற்றியும், எனது இலக்குகளைப் பற்றியும்தான் சிந்திப்பேன். போட்டியில் எனது முறை வருவதற்கு முன்பு ஹெட்செட்டில் மனதுக்கு இனிய பாடல்களைக் கேட்பேன். இது எனக்கு புத்துணர்ச்சி தரும்” என்கிறார் மனு பாகர்.