இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடக்க இருக்கும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் கை மணிக்கட்டில் எலும்பு முறிவால் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 100 சதவீதம் காயத்திலிருந்து மீளவில்லை என்பதால், ஷமி அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்படவில்லை.
ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து பாதியிலேயே காயம் காரணமாக நாடு திரும்பிய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் உடல்நலன் தேறிவிட்டார். இவருக்கான உடற்தகுதிப் பரிசோதனை முடிந்தபின், அதில் உமேஷ் யாதவ் தேறிவிட்டால், விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவதற்காக ஷர்துல் தாக்கூர் விடுவிக்கப்படுவார். உமேஷ் யாதவ் அணிக்குள் சேர்க்கப்படுவார்.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பில், “அகமதாபாத்தில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ் உடல் தகுதி பெற்றால், அவர் அணியில் சேர்க்கப்பட்டு, விஜய் ஹசாரே கோப்பைக்காக ஷர்துல் தாக்கூர் விடுவிக்கப்படுவார்.
மாற்று வீரர்களாக ஷான்பாஸ் நீதமுக்கு பதிலாக, லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கோனா ஸ்ரீகர் சேர்க்கப்பட்டுள்ளனர். விஜய் ஹசாரே கோப்பைக்காக பிரயங்க் பஞ்சல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களான அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர், கிருஷ்ணப்பா கவுதம், சவுரவ் குமார் ஆகியோர் தொடர்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், விருதிமான் சாஹா, ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இசாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.