விராட் கோலி, எம்.எஸ்.தோனி : கோப்புப்படம் 
விளையாட்டு

தோனியின் சாதனையைச் சமன் செய்த கோலி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஃபைனலுக்கு முன்னேறுமா இந்திய அணி ?

பிடிஐ

சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. ஆனால், 2-வது டெஸ்ட் போட்டியில் மீண்டு எழுந்த இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்துள்ளது

இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன.

இந்த டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் கோலி, தோனியின் சாதனையைச் சமன் செய்துள்ளார். முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி உள்நாட்டில் 21 வெற்றிகளைப் பெற்றிருந்தது. அதே அளவு எண்ணிக்கையிலான வெற்றியை கோலி தலைமையும் எட்டியுள்ளது.

தோனி தலைமையில் இந்திய அணி உள்நாட்டில் 21 டெஸ்ட் வெற்றிகள், 3 தோல்விகள், 6 போட்டிகளை டிரா செய்து 70 சதவீதம் வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், கோலி தலைமையில் இந்திய அணி 28 போட்டிகளில் 21 வெற்றிகள், 2 தோல்விகள், 5 டிரா என 77.8 சதவீதம் வெற்றியை வைத்துள்ளது.

முகமது அசாருதீன் தலைமையில் இந்திய அணி 13 வெற்றிகளும், கங்குலி தலைமையில் 10 வெற்றிகளும், கவால்கர் தலைமையில் 7 வெற்றிகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி 69.7 சதவீதத்துடன், 460 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நியூஸிலாந்து அணி 70 சதவீதத்துன் 420 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி 69.2 சதவீதத்துடன், 442 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அண 67 சதவீதத்துடன் 332 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

அகமதாபாத்தில் வரும் 24-ம் தேதி நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் இந்திய அணி குறைந்தபட்சம் ஒரு வெற்றி, ஒரு டிரா செய்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT