விளையாட்டு

சூதாட்டத்தில் ஈடுபட்ட மொகமது ஆமீருடன் ஆட முடியாது: ஹபீஸ் திட்டவட்டம்

இரா.முத்துக்குமார்

சூதாட்டத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீருடன் சேர்ந்து ஆட முடியாது என்று மொகமது ஹபீஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் பிரிமியர் லீகின் சிட்டகாங் வைகிங்ஸ் அணி ஹபீஸுடன் ஏற்படுத்தவிருந்த ஒப்பந்தத்தை மொகமது ஹபீஸ் நிராகரித்ததாக செய்திகள் எழுந்தன. காரணம் அந்த அணியில் சூதாட்ட வீரர் ஆமீர் இருந்தார் என்பதே.

“நான் எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் பேசவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கவுரவம் பற்றிய விவகாரம் இது. நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய நாட்டு கிரிக்கெட் அணியின் பெயரைக் கெடுத்த ஒருவருடன் நான் ஓய்வறையை பகிர்ந்து கொள்ள முடியாது. இந்த அணியில் ஆமீர் இருக்கிறார். வேறு அணிகள் நல்ல பண ஒப்பந்தத்துடன் வந்தால் நிச்சயம் விளையாடுவேன்.

இது எனது சொந்தக் கருத்து, இது பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல, அனைத்து வீரர்களுக்கும் பொருந்துவது. ஆட்ட உணர்வை மதிக்காத சூதாட்டத்தில் ஈடுபட்ட எந்தவொரு வீரருடனும் என்னால் ஓய்வறையை பகிர்ந்து கொள்ள முடியாது” என்றார்.

ஆனால், மிஸ்பா உல் ஹக், ஹபீஸ் கருத்துடன் முழுதும் உடன்படவில்லை, ஆனாலும் தன் கருத்தை வெளியிட ஹபீஸுக்கு உரிமை உண்டு என்றார்.

SCROLL FOR NEXT