உலகிலேயே அதிக நாட்கள் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைப் பற்றி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்திருந்தோம். 10 நாட்கள் நீடித்த அந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதியிருந்தன. அதற்கு நேர் எதிராக, மிகக் குறுகிய காலத்துக்குள் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியைப் பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.
1932-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டிதான் மிகக் குறுகிய காலத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியாகும். இப்போட்டி 5 மணிநேரம் 53 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது.
1932-ம் ஆண்டில் கேமரான் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில், தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. ஆனால் ஆஸ்திரேலியா அதற்கு கொஞ்சம்கூட இடம் கொடுக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவை முதல் இன்னிங்ஸில் 36 ரன்களுக்குள் அந்த அணி ஆல்அவுட் ஆக்கியது. இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 153 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலியாவை 200 ரன்களுக்குள் ஆல்அவுட் ஆக்கிய மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க அணி பேட் பிடித்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 45 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 6 மணிநேரத்துக்குள் முடிந்த டெஸ்ட் என்ற பெருமை, இப்போட்டிக்கு கிடைத்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பிரட் அயன்மோங்கர் 11 விக்கெட்களை வீழ்த்தினார்.