விளையாட்டு

தந்தை தந்தைதான்... மகன் மகன்தான்: தோனி, கோலியை ஒப்பிட்டு கபில் ருசிகரம்

பிடிஐ

கேப்டனாக தோனியின் சாதனைகளை எட்டிப்பிடிக்க கோலி இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

ஜெய்பூரில் ஒண்டர் சிமெண்ட் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கபில் கூறியதாவது:

கேப்டன்சியைப் பொறுத்தவரை தந்தை தந்தைதான்... மகன் மகன் தான். தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். இதைக்கூறும்போது இன்னொன்றையும் தெரிவிக்கிறேன், கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்புறுவார் என்று நான் வலிமையாக நம்புகிறேன்.

இந்திய-தென் ஆப்பிரிக்க தொடர் பற்றி..

ஆடுகளங்கள் இந்திய பலத்தை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டால் இந்தியா நன்றாக விளையாடும் என்றே கருதுகிறேன். அதாவது நல்ல பேட்டிங் சாதக ஆட்டக்களம் அதே வேளையில் நம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவிகரமாக அமைய வேண்டும். தென் ஆப்பிரிக்காவுக்கு பொருத்தமான ஆட்டக்களங்களை உருவாக்கினால் கடினமாகிவிடும்.

பிட்ச் விவகாரத்தில் நான் ரவிசாஸ்திரி பக்கமே. 2-2 என்று தொடர் சமநிலையில் உள்ளது. அப்போது ஆடுகளம் இந்திய அணிக்குச் சாதகமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அமையவில்லை. உள்நாட்டில் கேப்டன் விரும்பும் வகையிலான பிட்சை அமைத்துக் கொடுப்பதில் ஒன்றும் தவறில்லை. நாம் தென் ஆப்பிரிக்கா செல்லும் போது வேகமான, பந்துகள் எழும்பும் ஆட்டக்களங்களை எதிர்கொள்வதில்லையா?

சேவாக் ஓய்வு பற்றி...

பிரியாவிடை போட்டி அளிக்கும் விவகாரத்தை அணித் தேர்வாளர்களிடமே விட்டு விட வேண்டும். அனைவருக்கும் பிரியாவிடை போட்டி அளிப்பது கடினம். இன்னும் ஒரு போட்டி சேவாக் ஆடியிருக்க வேண்டுமோ இல்லையோ, ஆனால் அவர் ஒரு மிகப்பெரிய வீரர் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. அசாருதீன் 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார், 100-வது போட்டி வேண்டும் என்று விரும்பினார், ஆனால் நடக்கவில்லை.

இவ்வாறு கூறினார் கபில்தேவ்.

SCROLL FOR NEXT