இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை டெஸ்ட் தொடரின் 5-வது நாளில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. புஜாரா 15 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய கில் 50 ரன்களைக் கடந்து ஆட்டமிழந்தார்.
அணியின் துணை கேப்டன் ரஹானேவும் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த ஜோடிகளில் விராட் கோலி மற்றும் பண்ட் இணை மட்டுமே ரன்களைச் சேர்த்தனர்.
இதன் பின்னர் உணவு இடைவேளியின்போது இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பின் விராட் கோலி அரை சதம் எட்டினார். 46 பந்துகளில் 9 ரன்களை எடுத்திருந்த அஸ்வின், லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 72 ரன்கள் எடுத்திருந்த கோலி, பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்டெம்ப்பைப் பறிகொடுத்தார். இதனால் இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது.
அடுத்த சில ஓவர்களில் ஷபாஸ் நதீம் (0), பும்ரா (4) ஆட்டமிழக்க 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி கண்டது. அந்த அணியின் ஜாக் லீச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் குவித்த ஜோ ரூட்டுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் பேசும்போது, “டாஸை வென்றது முக்கியமானது. எனினும் நாங்கள் சிறப்பாகப் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நாங்கள் அதனைச் சிறப்பாகச் செய்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதுபோன்ற ஆடுகளத்தில் ஜெயிக்க வேண்டுமெனில் எந்த ஒரு வீரராவது அதிக ரன்களை எடுக்க வேண்டும். இந்த வாரம் நான் அதிக ரன்னை அடித்திருக்கலாம். அடுத்த வாரம் வேறு ஒரு வீரர் அடிக்கலாம்” என்றார்.