அறிமுகப் போட்டியில் 4-வது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து அணியை வெல்ல வைத்த மே.இ.தீவு வீரர் மேயர்ஸ் : படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

அட்டகாசமான சேஸிங்; அறிமுக வீரர் மேயர்ஸ் 4-வது இன்னிங்ஸில் சாதனை இரட்டை சதம்: மே.இ.தீவுகள் மைல்கல் வெற்றி: கோட்டைவிட்ட வங்கதேசம் 

க.போத்திராஜ்


அறிமுக வீரர் கைல் மேயர்ஸ் 4-வது இன்னிங்ஸில் அடித்த இரட்டை சதத்தால் சிட்டோகிராமில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது.

வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 430 ரன்களும், மே.இ.தீவுகள் அணி 259 ரன்களும் சேர்த்தனர். 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்து 395 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

395 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் 4-வது இன்னிங்ஸை ஆடிய ேம.இதீவுகள் அணி 127.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 395 ரன்கள் சேர்த்து 3 விக்ெகட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் மே.இ.தீவுகள் முன்னிலை பெற்றது.

டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய கைல் மேயர்ஸ், அபாரமாக ஆடி 4-வது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆசியக் கண்டத்தில், டெஸ்ட் போட்டியில் சேஸிங் செய்யப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் இதுவாகும்.

இதற்கு முன் கொழும்பு நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 388 ரன்களை இலங்கை அணி சேஸிங் செய்ததுதான் சாதனையாக இருந்தது. அதை மே.இ.தீவுகள் அணி முறியடித்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது 5-வது மிகப்பெரிய சேஸிங் ஆகஅமைந்தது.

அதுமட்டுமல்லாமல் அறிமுக வீரராக களமிறங்கி, அதிலும் 4-வது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வீரர் கைல் மேயர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேயர்ஸ் 303 பந்துளில் இரட்டை சதம் அடித்து 210 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 20 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடங்கும். முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் சேர்த்த மேயர்ஸ், 2-வது இன்னிங்ஸில் 210 ரன்கள் என ஒரே போட்டியில் 250 ரன்களைக் குவித்துள்ளார்.
அறிமுகப் போட்டியிலேயே 250 ரன்களைக் குவித்த முதல் மே.இ.தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் மேயர்ஸ் என்பது வரலாறாகும்.

அணியின் முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் 4-வுது விக்கெட்டுக்கு போனர்(86), மேயர்ஸ் கூட்டணி 216 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். கடந்த 1984-ம் ஆண்டுக்குப்பின் மே.இதீவுகள் தரப்பில் 4-வது விக்கெட்டுக்கு இந்த அளவு ரன்கள் சேர்த்தது இதுதான் முதல் முறையாகும்.

4-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் மே.இ.தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்திருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன, 285ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. போனர், மேயர்ஸ் கூட்டணி கடைசி நாளான இன்று நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி விக்கெட் விழாமல் ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்பினர்.

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேயர்ஸ் 177 பந்துகளில் முதல் சதத்தை பதிவு செய்தார். அறிமுகப் போட்டியில் 4-வது இன்னிங்ஸில் சதம் அடித்த 8-வது பேட்ஸ்மேன் எனும் சாதனையைப் படைத்தார்.

கடைசி 33 ஓவர்களுக்கு 129ரன்கள் தேவைப்பட்டது. பிற்பகல் தேநீர் இடைவேளைக்குப்பின் போனர் அதிரடியாக ஆட்டத்தை கையாண்டார். போனர் 10பவுண்டரி ,ஒருசிக்ஸர் உள்பட 86 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்து வந்த வீரர்களான பிளாக்வுட்(9) விரைவாக வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வாவை வைத்துக் கொண்டு மேயர்ஸ் ஆட்டத்தை மெல்ல வெற்றிக்கு நகர்த்தினார். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். ஜோஷ்வா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோச் டக்அவுட்டில் விக்கெட்டை இழந்தார்.

நிதானமாக ஆடிய மேயர்ஸ் 303 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்று 210 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் மேயர்ஸ் பெற்றார்.
வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT