சென்னையில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
2-வது நாளான நேற்றைய ஆட்டம் நேரமுடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் சேர்த்திருந்தது. டாம் பெஸ் 28 ரன்னிலும், லீச் 6 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஆட்டம் தொடங்கி 10 ஓவர்கள் மட்டுமே நிலைத்திருந்த இங்கிலாந்து டெய்ல்என்டர்கள் கூடுதலாக 23 ரன்கள்சேர்த்து மீதமிருந்த இரு விக்கெட்டுகளையும் இழந்தனர். பும்ரா பந்துவீச்சில் டாம் பெஸ் 34 ரன்கள் சேர்த்த நிலையில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அஸ்வின் பந்துவீச்சில், ஆன்டர்ஸன் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
190.1 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும், இசாந்த், நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கேபன் ஜோ ரூட்டின் 218 ரன்கள் பங்களிப்பால் இங்கிலாந்து அணி பிரமாண்டமான ஸ்கோரைப் பெற்றுள்ளது.
இந்திய அணி வீரர்களில் அஸ்வின், பும்ரா மட்டும் சேர்ந்து 91 ஓவர்கள் வீசியுள்ளனர். இந்திய பந்துவீச்சாளர்கள் மொத்தம் 1,141 பந்துகளை வீசியுள்ளனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் 600 ரன்களை எட்டவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் ஆனால், அவரின் எண்ணத்துக்கு சற்றுக் குறைவான ரன்களுடன் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது.
இன்னும் இந்திய அணிக்கு முழுமையாக 2 நாட்கள், 6 செஷன்கள் கைவசம் உள்ளன. இதில் இந்திய அணி பாலோஆன் பெறாமல் விளையாட வேண்டியது அவசியமாகும். மிகவும் நெருக்கடியான, அழுத்தமான ஸ்கோரை எதிர்கொண்டு இந்திய அணி களமிறங்கியது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக ஜோப்ரா ஆர்ச்சர் ஓவரை வீசினார்.
ஆர்ச்சர் வீசிய 4-வது ஓவரில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சத்தேஸ்வர் புஜாரா, கில்லுடன் இணைந்தார். நிதானமாகவும், ஓரளவுக்கு அடித்து ஆடியும் கில் பேட் செய்து வந்தார். ஆர்ச்சர் வீசிய 10-வது ஓவரில் ஆன்டர்ஸனிடம் கேட்ச் கொடுத்து, கில் 29 ரன்னில் வெளியேறினார்.
இந்திய அணி 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 28 ரன்களிலும் கோலி 4ரன்னிலும் களத்தில் உள்ளனர்.