இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து கேப்டன் ரூட் : படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

ஜோ ரூட் இரட்டை சதம்; இமாலய இலக்கை நோக்கி இங்கி: கையை பிசைந்து நிற்கும் இந்திய வீரர்கள்: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்

க.போத்திராஜ்


சென்னையில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து நிங்கூரமிட்டு பேட் செய்து வருகிறார்.

ஜோ ரூட்டை ஆட்டமிழக்கச் செய்வது எவ்வாறு எனத் தெரியாமல் கேப்டன் கோலி முதல், 5 பந்துவீச்சாளர்களும் கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.

2-வது நாளான இன்று மாலை தேநீர் இடைவேயின்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில், 4 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் சேர்த்துள்ளது. ரூட் 211 ரன்களுடனும், போப் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளளனர்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்திருந்தது இங்கிலாந்து அணி. ரூட் 128ரன்களுடன் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பென்ஸ்டோக்ஸுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தார். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை வெறுப்படைய வைக்கும் வகையில் பேட் செய்தனர்.

அபாரமாக ஆடிய ரூட் 260 பந்துகளில் 150 ரன்களையும், 341 பந்துகளில் 200 ரன்களையும் எட்டினார். அஸ்வின் பந்துவீச்சில் அபாரமாக சிக்ஸர் அடித்து 200 ரன்களை ரூட் அடைந்தார்

ஆல்ரவுண்டர் என நிருபிக்கும் வகையில் ஸ்டோக்ஸ், அரைசதம் அடித்து 82 ரன்களில்(10பவுண்டரி, 3சி்க்ஸர்) நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஜோ ரூட் இப்போது இருக்கும் ஃபார்மில் நிச்சயம் 600 ரன்ளுக்கு குறைவாக அடித்து டிக்ளேர் செய்யமாட்டார் எனத் தெரிகிறது. 600 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் அடித்த எந்த அணியும் தோற்றதாக வரலாறு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் இந்த அளவு மோசமானதாக இருக்கும் என இந்திய வீரர்கள்கூட நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால், 3-வது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருககும். அப்போது, இந்திய வீரர்கள் முதல் இன்னிங்ஸில் மொயின்அலி, லீச், பெஸ் ஆகியோரின் பந்துவீச்சில் எவ்வாறு திணறப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.

  • அட்டாகசமாக ஆடிய ஜோ ரூட் தொடர்ந்து தனது 2-வது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக (286)இரட்டை சதம், அடுத்ததாக ஒரு சதம்(186) அடித்த நிலையில், சென்னையில் இரட்டை சதம் அடித்துள்ளார்.
  • 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த கிரிக்கெட் உலகில் முதல் வீரர் ஜோ ரூட் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதுமட்டுமல்லாமல் ஆஸி. ஜாம்பவான் டான் பிராட்மேனுக்குப்பின் டெஸ்ட்போட்டிகளில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் 150 ரன்களுக்கு மேல் அடித்த 2-வது கேப்டன் ஜோன் ரூட் ஆவார்.
  • தொடரந்து 3 டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் குவித்தத வீரர்கள் பட்டியலி்ல் ரூட் 7-வது வீரராக இணைந்துவிட்டார். இதற்கு முன் நியூஸிலாந்து வீரர் டாம் லாதம், இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா, முடாசர் நாசர், ஜாகீர் அப்பாஸ், டான் பிராட்மேன், வாலே ஹேமண்ட் ஆகியோர் அடித்துள்ளனர்.
  • 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 9-வது வீரர் எனும் பெருமையை ரூட் பெற்றார். இதற்கு முன், கோலின் கவுட்ரே, ஜாவித் மியான்தத், கார்டன் கிரீனிட்ஜ், அலெக் ஸ்டீவார்ட், இன்சமாம் உல் ஹக், ரிக்கி பாண்டிங், ஹசிம் அம்லா ஆகியோர் 100-வது டெஸ்டில் சதம் அடித்துள்ளனர்.
  • 100 டெஸ்ட் போட்டிகளை மிகக்குறைந்த வயதில் விளையாடிய 3-வது வீரர் ரூட் ஆவார். தற்போது ரூட்டுக்கு 30வயதாகிறது. இதற்கு முன் அலிஸ்டார் குக் 28 வயதிலும், சச்சின் 29வ யதிலும் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடினர்.
  • இந்தியாவில் நடந்த டெஸ்டில் தொடர்ந்து 7 அரைசதங்களை அடித்த வீரர்களில் விவிஎஸ் லட்சுமண்(2009-2010), ஆல்வின் காளிச்சரண்(1974-79) ஆகியோருடன் ஜோ ரூட்டும் இணைந்துள்ளார்.
  • இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இந்தியாவில் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான்.
SCROLL FOR NEXT