விளையாட்டு

ரஹானேவுக்கு ரூ.1 கோடி சம்பளம்: ரெய்னா, புவனேஷ்வர் குமாருக்கு பாதியாக குறைந்தது

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை அவர்களின் தகுதி நிலைக்கு ஏற்ப 3 பிரிவுகளாக ஒப்பந்தம் செய்யும். இதன்படி 2015-2016ம் ஆண்டுக்காக வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி அஜிங்க்ய ரஹானே ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

ரஹானே தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி ஜிம்பாப்வே தொடரை வென்றிருந்தது. மேலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

இதே பிரிவில் தோனி, விராட் கோலி, அஸ்வின் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த ரெய்னா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தற்போது பி பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.50 லட்சம் சம்பள மாக கிடைக்கும்.

இந்த பிரிவில் அம்பட்டி ராயுடு, ரோஹித் சர்மா, முரளி விஜய், ஷிகர் தவண், உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, புஜாரா, முகமது சமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களும் ஆண்டுக்கு தலா ரூ.50 லட்சம் பெறுவார்கள்.

சி பிரிவில் அமித் மிஸ்ரா, அக்ஸர் படடேல், ஸ்டூவர்ட் பின்னி, விருதிமான் சஹா, மோகித் சர்மா, வருண் ஆரோன், கரண் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், தவால் குல்கர்னி, ஹர்பஜன்சிங், அரவிந்த் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும். ரவீந்திர ஜடேஜா கடந்த முறை பி பிரிவில் இடம் பெற்றிருந்தார்.

மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கப் பட்டிருந்தார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில் ஜடேஜா 8 விக்கெட் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஒப்பந்த பட்டியலில் 36 பேர் இடம் பெற்றிருந்தனர் இது தற்போது 26 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பங்கஜ்சிங், ராபின் உத்தப்பா, மனோஜ் திவாரி, வினய்குமார், பர்வேஷ் ரசூல், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT