அமெரிக்காவில் நடந்த ‘கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் 2015’ தொடரை வார்ன் வாரியர்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. நேற்று நடந்த 3-வது போட்டியில் அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக ‘கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் 2015’ என்ற தொடரை சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வார்னும் இணைந்து நடத்தினர். இந்த தொடரில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 28 பேர் இணைந்து விளையாடினர்.
இதில் முதல் 2 போட்டிகளிலும் வார்ன் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது.
டஸில் வென்ற சச்சின் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சச்சின் டெண்டுல்கர், 27 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். இந்த அணியில் கங்கூலி 50 ரன்களையும், ஜெயவர்த்தனே 41 ரன்களையும், ஹூப்பர் 33 ரன்களையும் குவித்தனர். இதனால் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. வார்ன் வாரியர்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய வெட்டோரி 33 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து ஆடவந்த வார்ன் வாரியர்ஸ் அணி, மிகுந்த உறுதியுடன் வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தது. சைமண்ட்ஸ் (31 ரன்கள்), சங்கக்கரா (42 ரன்கள்), பாண்டிங் (43 ரன்கள்), காலிஸ் (47 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்ய 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டுமே இழந்து அந்த அணி வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் இந்த போட்டித்தொடரை 3-0 என்ற கணக்கில் வார்ன் வாரியர்ஸ் அணி கைப்பற்றியது.