சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று தொடங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் திடீரென விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக ஜார்கண்ட் சுழற்பந்துவீச்சாளர் ஷான்பாஸ் நதீம், ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பில், “ இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அக்ஸர் படேல் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு இடது முழங்காலில் வலி ஏற்பட்டதையடுத்து, பயிற்சியில் பங்கேற்கவில்லை.
இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அக்ஸர் படேல் உடல்நிலையை பிசிசிஐ மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. அவரின் உடல்நிலை குறித்த விரிவான அறிக்கை விரைவில் வரும். முதல் போட்டியில் அவர் விளையாடமாட்டார். இந்திய அணியில் ஷான்பாஸ் நதீம், ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளனர் ”எ னத் தெரிவித்தார்.
ரவிந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயத்தையடுத்து அவரின் இடத்தை நிரப்ப அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார். இப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.