சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் திட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்ரிங் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 3 பேருக்கும் ஐசிசி, கிரிக்கெட் வர்ணனையாளர்கள், ரசிகர்கள், கிரிக்கெட் பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள், ஒளிபரப்பாளர்கள் எனப் பலரும் ஆன்லைனில் வாக்களித்துச் சிறந்த வீரரைத் தேர்வு செய்வார்கள்.
மகளிர் பிரிவில் பாகிஸ்தான் வீராங்கனை டயானா பெய்க், தென் ஆப்பிரிக்காவின் ஷாப்னிம் இஸ்மாயில், மரியாஜானே கேப் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய ரிஷப் பந்த், சிட்னி டெஸ்ட்டில் 97 ரன்கள் சேர்த்து சதத்தைத் தவறவிட்டார். இருப்பினும் ரிஷப் பந்த் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்து, போட்டி டிரா ஆனது.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் 89 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்கால் இருந்து அணியை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் 228, 186 ரன்கள் சேர்த்து தொடரை 2-0 என வெல்லக் காரணமாக அமைந்தார்.
அயர்லாந்து வீரர் பால் ஸ்ட்ர்ரிங், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் ஆட்டங்கள் என 5 போட்டிகளில் 3 சதங்கள் அடித்தார். மகளிரைப் பொறுத்தவரை பாகிஸ்தான் வீராங்கனை டயானா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்க வீராங்கனை இஸ்மாயில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு வீாாங்கனை மரிஜானே கேப் ஆல்ரவுண்டராக ஜொலித்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 115 ரன்களும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஆடவர், மகளிர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேருக்கும் ஐசிசி, கிரிக்கெட் வர்ணனையாளர்கள், கிரிக்கெட் பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள், ஒளிபரப்பாளர்கள் எனப் பலரும் ஆன்லைனில் வாக்களித்து சிறந்த வீரரைத் தேர்வு செய்வார்கள். இவர்கள் அனைவருக்கும் 90 சதவீத வாக்குகளும், ரசிகர்களுக்கு 10 சதவீத வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.