பெங்களூரு டெஸ்ட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 214 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 22 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் மழை காரணமாக மூன்று நாட்கள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடைசி நாளான நேற்றும் ஆட்டம் கைவிடப்பட்டது. 11 மணி அளவில் ஆடுகளத்தை பார்வையிட்ட நடுவர்கள் மைதானம் ஈரப்பதமாக இருப்பதால் கடைசி நாள் ஆட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து பெங்களூரு டெஸ்ட் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 3வது டெஸ்ட் வரும் 25ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.
இந்நிலையில் பெங்களூரு டெஸ்ட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:
மழையால் போட்டி ரத்தானது ஏமாற்றமாக உள்ளது. முதல் நாள் ஆட்டம் எங்களுக்கு சிறப்பாக அமைந்த நிலையில் 2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் ரத்தானது வெறுப்பாக இருந்தது. முதல் நாளில் கடினமாக போராடி ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் வானிலை எல்லாவற்றையும் புரட்டி போட்டுவிட்டது. அடுத்த நாட்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனது.
ஆட்டம் சிறப்பாக அமைகிறதோ, இல்லையோ மைதானத்துக்கு வந்து விட்டு விளையாடாமல் இருப்பது என்பது எந்த அணிக்கும் எரிச்சல் அடையத்தான் செய்யும். 4வது நாளிலாவது பேட் செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தால் கடைசி நாள் ஆட்டத்தில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். நம்பர் ஒன் அணிக்கு எதிராக பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் தான் பந்து வீசுகிறோம். ஆடுகளத்தில் எந்தவிதமான மாயாஜாலங்கள் இல்லை என்று தெரிவித்தார்.
மழையால் போட்டி பாதிக்கப்படும் நேரங்களில் ஈடுநாள் (ரிசர்வ் நாள்) வைத்தால் சரிவருமா என கோலியிடம் கேட்ட போது, டெஸ்ட் போட்டியில் 4 நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்படும் நிலையில், ஈடு நாளில் மட்டும் எதுவும் நடைபெற்று விடாது. மாறாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்படும் சமயங்களில் வேண்டுமானால் ஈடு நாள் பயன்படலாம். 4 நாள் ஆட்டம் இழக்கப்பட்ட நிலையில் ஈடு நாள் வழங்குவதில் எவ்வித தர்க்கமும் இருக்காது. இதற்கு என்ன தீர்வு காண்பது என்பதும் தெரியவில்லை.
அதற்காக பாதிக்கப்படும் நாட் களுக்கு ஈடாக அதே நாட்களை வழங்க வேண்டும் என்றால் போட்டி கள் 9 நாட்களை கொண்டதாகி விடும், இது நம்பகத்தன்மை இல்லாததாகிவிடும். அதனால் எந்தவித மாற்றமும் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அதனால் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டியது தான் என்றார்.
அணியில் மாற்றம் இல்லை
இந்நிலையில் பெங்களூருவில் நேற்று கூடிய இந்திய அணி தேர்வாளர்கள் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லையென அறிவித்தனர்.
3வது டெஸ்ட் நாக்பூரில் நவம்பர் 25ம் தேதியும், கடைசி டெஸ்ட் டிசம்பர் 3ம் தேதி டெல்லியிலும் தொடங்குகிறது.
அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவண், புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விருதிமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, குருகீரத் சிங் மான்.
ஜடேஜா முன்னேற்றம்
பெங்களூ டெஸ்ட் போட்டியின் முடிவில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 8 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆம்புலன்ஸில் திரும்பிய வீரர்கள்
போட்டி டிரா ஆனதை தொடர்ந்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சொகுசு பேருந்துகளில் ஏறி, தாங்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றனர்.
ஆனால் பேருந்து கிளம்புவது தெரியாமல் கிரிக்கெட் வீரர்கள் தவண், ராகுல், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆகியோர் மைதானத்திலே இருந்தனர். சொகுசு பேருந்து விட்டுவிட்டு சென்றதை அறிந்த கிரிக்கெட் வீரர்கள் மைதான வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏறி, ஹோட்டலை சென்றடைந்தனர்.