ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வரும் 8வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் நேற்று இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்தியாவின் மன்தீப்சிங், பீல்டு கோல் அடித்தார். அடுத்த நிமிடமே மன்பிரீத் 2வது கோலை அடித்தார்.
23வது நிமிடத்தில் ஹர்மான்பிரித் சிங்கும் 27வது நிமிடத்தில் விக்ரம்ஜித்சிங்கும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் இந்தியா 4-0 என முன்னிலை வகித்தது. 44வது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோலை அடித்தது. இந்த கோலை ஷோட்டா யமடா அடித்தார்.
60வது நிமிடத்தில் ஹர்மான் பிரித்சிங்கும், 64வது நிமிடத்தில் வருண் குமாரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினர். முடிவில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அல்லது தென் கொரியாவுடன் மோதுகிறது.