விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: சச்சினின் சாதனையை முறியடித்த ஷபாலி

பி.எம்.சுதிர்

கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அவரது சாதனையையே முறியடித்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஷபாலி வர்மாவின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 28).

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ரோஹ்டக் எனும் ஊரில் பிறந்த ஷபாலி வர்மாவுக்கு சிறு வயதில் இருந்தே பெண்கள் ஆடும் ஆட்டங்களில் ஆர்வம் இல்லை. ஆண் குழந்தைகள் கிரிக்கெட் ஆடும் இடங்களில்தான் இவரைப் பார்க்க முடியும். 10 வயது முதல் ஆண் குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடுவதை வழக்கமாக கொண்ட அவர், பல போட்டிகளில் அவர்களைவிட அதிகமாக ரன்களைக் குவித்துள்ளார். இப்படி தெருக்களில் கிரிக்கெட் ஆடத் தொடங்கியவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, 15 வயதிலேயே ஹரியாணா மாநில அணியில் இடம் பிடித்தார்.

இந்த சூழலில் 2019-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான டி20 போட்டி ஒன்றில், ஹரியாணா அணிக்காக 56 பந்துகளில் 128 ரன்களைக் குவிக்க, தேசிய கிரிக்கெட் தேர்வாளர்களின் பார்வை இவர் மீது விழுந்தது. 2020-ம் ஆண்டில் நடந்த மகளிர் டி20 போட்டியில் அதிக ரன்களைக் குவித்த ஷபாலி, இதுவரை 19 போட்டிகளில் 487 ரன்களை அடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், 29 பந்துகளில் 73 ரன்களைக் குவித்ததன் மூலம் மிகக் குறைந்த வயதில் (15 ஆண்டு 285 நாட்கள்) சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

இதன்மூலம் 16 வயதில் அரைசதம் அடித்து சச்சின் படைத்த சாதனையை முறியடித்தார். மேலும் இதே போட்டியில் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து முதல் விக்கெட் ஜோடியாக 143 ரன்களைக் குவித்தார். டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கான இந்தியாவின் அதிகபட்ச கூட்டணியாகும் இது.

SCROLL FOR NEXT