2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல்டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ம் ேததி நடப்பது உறுதி என ஐபிஎல் நிர்வாகிகள் இன்று அறிவித்தனர்.
14-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்துக்கு 8 அணிகளும் தயாராகி வருகின்றன. தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்பிடம் அளித்துள்ளன.
இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் சிறிய அளவிலான வீரர்கள் ஏலம் நடக்கும். ஏனென்றால், 2022-ம் ஆண்டில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைவதால், ஒட்டுமொத்தமாக அணிகள் கலைக்கப்பட்டு மிகப்பெரிய ஏலம் அடுத்த ஆண்டில்தான் நடக்கும்.
ஆதலால், சிறிய அளவிலான ஏலம் இந்த ஆண்டு சென்னையில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவித்தன. ஐபிஎல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், " சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி ஐபிஎல் மினிஏலம் நடக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 17ம் தேதி முடிகிறது. அந்த போட்டி முடிந்தபின், ஐபிஎல் ஏலம் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5-ம் தேதி சென்னை எம்ஏசி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியை எங்கு நடத்துவது என இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், வாய்ப்புகள் அனைத்தும் சாதகமாக இருந்து, அரசு அனுமதித்தால் போட்டிகள் நாட்டில் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தியாவில் நடக்காத நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இந்த முறையும் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்.
ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவித்த வீரர்கள் குறித்த பட்டியலை பிசிசிஐ அமைப்பிடம் வழங்கிவி்ட்டன. இதுவரை 8 அணிகளும் சேர்ந்து 139 வீரர்களை தக்கவைத்துள்ளன, 57 வீரர்களை விடுவித்துள்ளன.
| அணிகள் | தொகை(கோடி) | வீரர்கள் எண்ணிக்கை | வெளிநாட்டு வீரர்கள் |
| பஞ்சாப் | ரூ.53.20 | 9 | 5 |
| ஆர்சிபி | ரூ.35.90 | 13 | 4 |
| ராஜஸ்தான் | ரூ.34.85 | 8 | 3 |
| சிஎஸ்கே | ரூ.22.90 | 7 | 1 |
| மும்பை | ரூ.15.35 | 7 | 4 |
| டெல்லி | ரூ.12.90 | 6 | 2 |
| கேகேஆர் | ரூ.10.75 | 8 | 2 |
| சன்ரைசர்ஸ் | ரூ.10.75 | 3 | 1 |