பிசிசிஐ அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலிக்கு எந்தவிதமான உடல்நலப்பிரச்சினையும் இல்லை. வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது,திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சேர்க்கப்பட்டார் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளி்க்கப்பட்டது. கங்குலியின் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன.
கடந்த சில வாரங்களாக கங்குலி வீட்டில்யே ஓய்வு எடுத்துவருகிறார். அவரை நாள்தோறும் உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களும் , செவிலியர்களும் நேரடியாகச் சென்று சிகிச்சையளித்து,உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சவுரவ் கங்குலிக்கு திடீரென மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தகவல்வெளியானது. இதையடுத்து, கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று ஊடகங்களில் தகவல் வெளியானது.
ஆனால், அது உண்மையான தகவல் இல்லை. கங்குலி உடல்நலத்துடன் நலமாக இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கங்குலி உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் “ சவுரவ் கங்குலி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைக்குப்பின் உடல்நிலையை பரிசோதனை செய்யவே இன்று அனுமதிக்கப்பட்டுல்ளார். அவரின் உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை. நலமுடன் இருக்கிறார். ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைக்குப்பின் வழக்கமான பரிசோதனைக்காகவே கங்குலி வந்துள்ளார்.” எனத் தெரிவித்தன.