அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 216 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டி பிறகு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் வெற்றியில் மொகமது ஹபீஸ் 102 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். ஹபீஸ் தனது 11-வது ஒருநாள் சதத்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். பாபர் ஆஸம் என்ற வீரருடன் மொகமது ஹபீஸ் 5-வது விக்கெட்டுக்காக 106 ரன்களைப் பகிர்ந்து கொண்டார். பாபர் ஆஸம் 62 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அரைசதம் எடுக்க கிறிஸ் வோக்ஸ் பந்தை மிகப்பெரிய சிக்சருக்கு விரட்டினார்.
இங்கிலாந்து பேட் செய்யத் தொடங்கி ஜேசன் ராய், ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரை 4 ஓவர்களுக்குள் இழந்தது. அதாவது 14/3 என்று தடுமாறியது இங்கிலாந்து. ஜேசன் ராய் மொகமது இர்பான் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் பவுல்டு ஆனார். நேரான வேகமான பந்து அது.
அதன் பிறகு இயன் மோர்கன், ஜேம்ஸ் டெய்லர் இணைந்து 133 ரன்களைச் சேர்த்து அணியை மீட்டனர். மோர்கன் தனது 76 ரன்களில் 11 பவுண்டரிகளை அடித்தார். ஆனால் ஷோயப் மாலிக்கின் பந்தில் சர்பராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேற இங்கிலாந்து மேலும் சரிவைச் சந்தித்தது. அதே ஓவரில் தேவையில்லாத ஒரு ரன்னுக்காக ஜோஸ் பட்லர் ரன் அவுட் ஆனார். இந்தக் கட்டத்தில் பாகிஸ்தான் பீல்டிங் பொறிபறந்தது.
அதன் பிறகு டெய்லரும் ஷோயப் மாலிக் பந்தில் வெளியேறினார். மொயின் அலி 7 ரன்கள் எடுத்து பாபர் ஆசமின் அருமையான கேட்சுக்கு யாசிர் ஷாவிடம் வீழ்ந்தார். அடில் ரஷித் மொகம்து இர்பானிடம் 7 ரன்னுக்கு கேட்சில் அவுட் ஆனார். கிறிஸ் வோக்ஸ் அடித்த 33 ரன்களினால் 200 ரன்களை இங்கிலாந்து தாண்டியது. கடைசியில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மொத்தத்தில் பாகிஸ்தான் பந்து வீச்சு அதற்கு தக்கவாறான பீல்டிங் ஆகியவை இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது. 7 அடி உயர மொகமது இர்பான் 10 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, அன்வர் அலி, ஷோயப் மாலிக் தலா 2 விக்கெட்டுகளக் கைப்பற்றினர். 69 ரன்களுக்கு இங்கிலாந்து மடமடவென கடைசி 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
இலக்கைத் துரத்திய பாகிஸ்தான், இங்கிலாந்து பவுலர் டோப்லியிடம் அசார் அலி (8), பிலால் ஆசிப் (2) ஆகியோரை வந்தவுடன் இழந்தது. யூனிஸ் கான் தட்டுத்தடுமாறிய தனது கடைசி இன்னிங்ஸில் 9 ரன்களில் டோப்லியிடம் அவுட் ஆனார். 41/3 என்ற நிலையில் மொகமது ஹபீஸ் மட்டுமே சிறப்பாக ஆடினார். ஷோயப் மாலிக் 26 ரன்களை எடுத்து வெளியேறினாலும் இவரும் ஹபீஸும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 70 ரன்களைச் சேர்த்தனர். மாலிக், மொயீன் அலியிடம் வீழ்ந்தார்.
111/4 என்ற நிலையில் அற்புத கேட்சைப் பிடித்து மொயின் அலியை வெளியேற்றிய பாபர் ஆஸம் இறங்கினார், இவர் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 62 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க, மொகமது ஹபீஸ் 10 பவுண்டரிகளுடன் 1 சிக்சருடன் 130 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக வெற்றிக்கு இட்டுச் சென்றார். இங்கிலாந்தில் டோப்லி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகன்: மொகமது ஹபீஸ்.
வெள்ளிக்கிழமையன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.