தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா : கோப்புப்படம் 
விளையாட்டு

ஆஸி.யில் சாதித்த நடராஜன், ஷைனி, தாக்கூர், சுந்தர், கில், சிராஜுக்கு ‘தார்-எஸ்யுவி ஜீப்’ - ஆனந்த் மகிந்திராவின் பரிசு

ஏஎன்ஐ

ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த டெஸ்ட் தொடரை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணியில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக வீரர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் ஷைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஷுப்மான் கில் ஆகியோருக்கு தார்-எஸ்யுவி ஜீப் பரிசாக வழங்கப்படும் எனத் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா இன்று அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் அபாரமாக வென்று தாயகம் திரும்பியது. அதிலும் ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர்கள் மண்ணில் வைத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

அதிலும் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் காபா மைதானத்தில் 32 ஆண்டுகளாகத் தோல்வியைச் சந்தித்திராத ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட்டில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்தது. இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றி உலக கிரிக்கெட் ரசிகர்களை பிரமிப்படைய வைத்துள்ளது.

இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாக இருந்த இளம் வீரர்கள் 6 பேருக்கு மகிந்திரா நிறுவனத்தின் தார்-எஸ்யுவி ஜீப் பரிசாக வழங்கப்படும் என்று தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா இன்று அறிவித்துள்ளார்.

ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் 6 இளம் வீரர்கள் அறிமுகம் ஆகினர். இந்தியாவில் உள்ள எதிர்கால இளைஞர்கள் சாத்தியமில்லாததைக் கனவு காண்பதையும், நிறைவேற்றுவதையும் சாத்தியமாக்கியுள்ளனர்.

பிரதிநிதித்துவப்படம்

இவர்கள்தான் உண்மையான எழுச்சியின் கதைகள், தடைகளைத் தாண்டி சிறப்பான விஷயங்களைச் செய்துள்ளார்கள். வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஊக்கமாக இவர்கள் இருக்கிறார்கள். இந்த 6 வீர்களுக்கும் என்னுடைய மகிழ்ச்சிக்காக, தார் எஸ்வியு ஜீப்பைப் பரிசாக என்னுடைய பணத்தில் வழங்குகிறேன். நிறுவனத்தின் பணத்தில் அல்ல.

இந்தப் பரிசு வழங்குவதற்குக் காரணம், இளம் வீரர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சிராஜ், ஷர்துல், ஷுப்மான் கில், நடராஜன், நவ்தீப் ஷைனி, வாஷிங்டன் ஆகியோர் மகிந்திரா ஜீப் பெறுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT