சர்ச்சைக்குரிய என்.சீனிவாசன் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து ஆங்காங்கே விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் "என் மனசாட்சி சுத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார் சீனிவாசன்.
ஐபிஎல் சூதாட்ட விசாரணையில் சீனிவாசன் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்துள்ள நிலையில் பிசிசிஐ நடவடிக்கைகளில் அவர் தலையீடு இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து உலக கிரிக்கெட் அமைப்பான ஐசிசி-யை வழி நடத்த அவர் சரியான தேர்வுதானா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் அளித்த சீனிவாசன்: "என்னைப் பொறுத்த அளவில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை, எனதளவில் நான் தவறான செய்கையில் ஈடுபடவில்லை. ஆகவே என் மீது கறை எதுவும் இல்லை இதனால் என் மனசாட்சி சுத்தமாக உள்ளது. விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, விவரங்கள் வெளியே வரும்” என்றார்.
இவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதான புகார்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சீனிவாசன், "அவர் தன்னை குற்றமற்றவர் என்பதை அவரேதான் நிரூபிக்க வேண்டும், அதாவது அவர் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கப்படாவிட்டாலும் அவர்தான் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற பொருளில் கூறுகிறேன், விசாரணை முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும், ஒன்றும் நிரூபிக்கப்படவில்லையெனில் விமர்சனங்கள் நியாயமில்லைதானே” என்றார் அவர்.
இதன் பிறகு கிரிக்கெட் வளர்ச்சி குறித்து சீனிவாசன் கூறியதாவது:
இப்போதைக்கு முக்கியமான விஷயம் என்னவெனில் கிரிக்கெட் ஆட்டத்தை மேலும் சுவாரசியமாக ஆக்குவது எப்படி என்பதே, திறமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அசோசியேட் அணிகளும் மேலே வந்து டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடவேண்டும், இதனால் போட்டி உருவாகும், கிரிக்கெட்டின் தரமும் உயரும், மக்களும் அதிகம் பேர் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க ஆர்வம் காட்டுவர்.
என்று கூறிய சீனிவாசன் ஐசிசி கிரிக்கெட் ஊழல் தடுப்புக் குழுவினர் அபாரமாகச் செயல்படுகின்றனர் என்று பாராட்டினார்