விளையாட்டு

ஐபிஎல் சதத்தை விட அடிலெய்ட் டெஸ்ட்டில் எடுத்த 35 ரன்களே சிறந்தது-விருத்திமான் சாஹா

செய்திப்பிரிவு

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக அடித்த சதத்தை விட 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட்டில் எடுத்த 35 ரன்களே சிறந்தது என்று விருத்திமான் சாஹா கூறியுள்ளார்.

பெங்கால் அணிக்கு ஆடி வரும் சஹா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் பல முக்கியமான ஆட்டங்களை ஆடியதோடு திறமையான விக்கெட் கீப்பிங்கும் செய்தார்.

"இரண்டும் வேறு வேறு சூழ்நிலை என்றாலும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் எடுத்த 35 ரன்கள் என் இதயத்திற்கு நெருக்கமானது. மேலும் விராட் கோலியுடன் இணைந்து அந்த குறிப்பிட்ட இன்னிங்ஸில் 6வது விக்கெட்டுக்காக 100 ரன்களுக்கும் மேல் சேர்த்தது மறக்க முடியாதது" என்றார் சாஹா.

அவர் மேலும் தெரிவிக்கையில், "ஐபிஎல் இறுதிப்போட்டியில் அடித்த சதம் எனக்குப் பெருமை அளிக்கிறது, ஆனால் அது டெஸ்ட் மேட்ச், விராட் கோலி அடிலெய்டில் பிரமாதமாக ஆடி வந்தார். அவரது முதல் டெஸ்ட் சதத்தை எடுக்க எனது ஆட்டம் பங்களித்தது குறித்து மேலும் பெருமையடைகிறேன்.

ரியான் ஹேரிஸ், பென் ஹில்பென்ஹாஸ், பீட்டர் சிடில் ஆகியோர் வீசினர், நான் 94 பந்துகளைச் சந்தித்தேன், அது என்னுடைய 2வது டெஸ்ட். நான் அவுட் ஆகும் வரை ஆஸி. வீச்சாளர்களின் வேகம் மற்றும் ஸ்விங் பந்து வீச்சிற்கு தடுமாறவில்லை. உயர்ந்த மட்டத்தில் நானும் விளையாட முடியும் என்ற தன்னம்பிக்கையை எனக்கு அந்த 35 ரன் இன்னிங்ஸ் அளித்தது" இவ்வாறு கூறினார் சாஹா.

SCROLL FOR NEXT