முகமது சிராஜ் : கோப்புப்படம் 
விளையாட்டு

ஆஸி. டெஸ்ட் தொடரில் கண்டுபிடிக்கப்பட்டவர் முகமது சிராஜ்: ரவி சாஸ்திரி புகழாரம்

பிடிஐ

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட வீரர் முகமது சிராஜ். பல இழப்புகளைச் சந்தித்து சாதித்துள்ளார் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குத் தேர்வான முகமது சிராஜ், ஆஸ்திரேலியப் பயணத்தில் இருந்தபோது அவரின் தந்தை முகமது கவுஸ் ஹைதராபாத்தில் காலமானார். ஆனால், ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பி மீண்டும் வரும்போது 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் முகமது சிராஜ் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கூடப் பங்கேற்பதைத் தவிர்த்தார்.

இந்திய அணியில் முகமது ஷமி காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டார். சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, ரசிகர்களிடம் இருந்து இனவெறி வார்த்தைகளை எதிர்கொண்டார்.

ஆனால், மனம் தளராமல் விளையாடிய சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக 13 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இந்திய அணியில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை சிராஜ் பெற்றார்.
26 வயது சிராஜின் மன வலிமையைப் பாராட்டிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியத் தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட வீரர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ட்விட்டரில் ரவி சாஸ்திரி பதிவிட்ட கருத்தில், “ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பந்துவீச்சு தாக்குதலில் அவர் செய்தவிதம், வெளிப்படுத்திய மனவலிமை ஆகியவற்றால் ஒருவரைக் கண்டுபிடித்துள்ளோம். அவர் முகமது சிராஜ். தனிப்பட்ட முறையில் இழப்பால் தந்தையை இழந்தார். இனரீதியான வார்த்தைகளை எதிர்கொண்டார்.

அனைத்தையும் தாங்கிக்கொண்டு, இந்திய அணி கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தார். ஆஸி. தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட வீரர் சிராஜ்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT