விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டிய ஆஸி. பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் மோடி

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.

அஜிங்க்ய ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பிரிஸ்பனில் உள்ள கபாவில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முழு வலிமைகொண்ட ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்றகணக்கில் வென்று பார்டர்-கவாஸ்கர் டிராபியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், இந்தியஅணியின் வெற்றியை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பாராட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பதிவில், ‘‘ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒரு பெரிய வெற்றியை பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். இது விளையாட்டின் சிறந்த அணிகள் மற்றும் வீரர்கள் இடையே நடைபெற்ற கடுமையாக போராட்ட போட்டி. டிம் பெயின் மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியினர் மீண்டு வருவார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மோரிசனுக்கு ட்விட்டரில் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, ‘‘நன்றி, ஸ்காட்மோரிசன். இது ஒரு விறுவிறுப்பான தொடராக இருந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா களத்தில் வல்லமைமிக்க போட்டியாளர்களையும், மேலும் உறுதியானகூட்டாளிகளையும் உருவாக்குகின்றன’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT