ஹர்பஜன் சிங்: கோப்புப் படம். 
விளையாட்டு

விடைபெற்றார் ஹர்பஜன் சிங்: சிஎஸ்கே அணியுடனான ஒப்பந்தம் முடிந்தது

ஏஎன்ஐ

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. அணியில் விளையாடிய நாட்கள் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணியில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. 14-வது ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் விடுவிக்கப்படுவதற்கான பேச்சு எழுந்த நிலையில், ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அவரே அறிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை 21-ம் தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். சிறிய அளவிலான ஏலம் பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் நடப்பு ஆண்டு ரூ.85 கோடிக்கு மேல் ஏலத் தொகை உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து அணிகளும் தங்களிடம் இருக்கும் விலை உயர்ந்த வீரர்களை விடுவித்து, தொகையை அதிகப்படுத்திக்கொண்டு, ஏலத்தில் புதிய வீரர்களை எடுக்க ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் சிஎஸ்கே அணியிலிருந்து இந்த முறை கேதார் ஜாதவ், சுரேஷ் ரெய்னா, முரளி விஜயன், பியூஷ் சாவ்லா போன்றோரும் வெளிநாட்டு வீரர்கள் சிலரும் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஹர்பஜன் சிங் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை இன்று மாலை வெளியிடுகின்றன. ஆனால், அதற்குள்ளாகவே சிஎஸ்கே அணியுடனான தனது ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ஹர்பஜன் சிங் ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியுடனான என்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடியது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அழகான நினைவுகள், சிறந்த நண்பர்கள் என எப்போதுமே நினைவில் வைத்திருப்பேன்.

2 ஆண்டுகளாக அணியில் நீடித்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள், ஊழியர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங், தனிப்பட்ட காரணங்களால் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT