இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என்னுடைய கனவாக இருந்தது. உங்களின் ஆதரவால் டெஸ்ட் தொடரை வென்றுள்ளோம் என தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
வறுமையான குடும்பச் சூழல், வாய்ப்புக்காகக் காத்திருந்து நடத்திய போராட்டம், ரப்பர் பந்தில் பயிற்சி என பாதைகள் முழுவதும் முட்களுடன் பயணித்து நடராஜன் இந்திய அணிக்குள் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணிக்குள் நெட் பந்துவீச்சாளராக இடம் பெற்ற நடராஜன், ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர் வரை தனது தனித்திறமையான பந்துவீச்சால் முன்னேறியது குறித்து ஐசிசியும், பிசிசிஐயும் பாராட்டு தெரிவித்துள்ளன. தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 32 ஆண்டுகளாக காபா மைதானத்தில் தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய அணி முதல் தோல்வியை இந்தியாவிடம் கண்டுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் காயத்தால் நாடு திரும்பிய நிலையில், இளம் அறிமுக வீரர்கள் சேர்ந்து பார்டர் கவாஸ்கர் கோப்பையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை வென்றபோது, ஆஸி. அணியில் ஸ்மித், வார்னர் இல்லாத பலவீனமான ஆஸி. அணியை இந்தியா வென்றது என விமர்சிக்கப்பட்டது.
ஆனால், இந்த முறை இந்தியாவில் முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு ஸ்மித், வார்னர் இருக்கும் வலிமையான ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வென்று சாதித்துள்ளது.
இந்திய அணியின் இந்த சாதனை வெற்றியை கிரிக்கெட் பிரபலங்கள், முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டி ரூ.5 கோடி போனஸும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த வெற்றி குறித்து தமிழக வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த இரு மாதங்களாக நான் கனவு உலகத்தில் இருந்தேன். இந்திய அணியுடன் நான் இருந்த காலம்தான் என் வாழ்வில் சிறந்ததாக இருக்கும். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என் கனவாக இருந்தது. இந்த ஆஸ்திரேலியப் பயணத்தில் பல்வேறு தடைகளைத் தகர்த்து, கடந்து தொடரை வென்றுள்ளோம். அனைத்துக்கும் உங்களின் ஏகோபித்த ஆதரவுதான் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.