தனது கிரிக்கெட் ஆட்டத்தின் ஆரம்ப காலங்களில் தனது ஊர் ராஞ்சி என்றால் மக்களுக்கு அது பற்றி புரியவில்லை, அதனை கராச்சி என்றே கருதி வந்ததாகவும், தற்போது கிரிக்கெட் மூலம் ராஞ்சி சர்வதேசப் புகழை எட்டியுள்ளது என்று கூறினார் தோனி.
ஜே.எஸ்.சி.ஏ. ஸ்டேடியத்தில் கண்ட்ரி கிரிக்கெட் கிளப் தொடக்க விழா நிகழ்ச்சியில் தோனி பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியதாவது:
எனது முதல் போட்டிக்கு முன்பாக நான் கென்யாவில் இருந்தேன், நான் அங்கு ஒரு சதம் எடுத்தவுடன் ரசிகர்கள் என்னிடம் நான் எந்த ஊர் என்று கேட்டனர், நான் ராஞ்சி என்றேன், உடனே நாடு பிரிக்கப்பட்டப் பிறகு என் பெற்றோர்கள் இங்கு வந்து விட்டனரா என்று கேட்டனர், அவர்கள் ராஞ்சியை கராச்சி என்று நினைத்தனர். நான் உடனே கராச்சி அல்ல ராஞ்சி என்றேன்” என்று கூறியதாகத் தெரிவித்தார்.
அதன் பிறகு காலம் எப்படி மாறிவிட்டது. இன்று ஜார்கண்ட், ராஞ்சி உலகப் புகழ்பெற்றது கிரிக்கெட் மூலம் என்றார் தோனி, “நான் எந்த ஒரு அயல்நாட்டு வீரருடன் பேசும்போதும் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள இந்த மைதானத்தை வானளாவப் புகழ்ந்து பேசியிருக்கின்றனர்.
இந்தியாவில் சிறந்த மைதானம் என்று அவர்கள் கூறினர். மேலும் உலகின் டாப் 2 மைதானங்களில் ராஞ்சி மைதானத்திற்கு இடம் உண்டு என்றும் அவர்கள் என்னிடம் கூறியிருக்கின்றனர். முதன் முதலாக நான் இந்த ஸ்டேடியத்தைப் பார்வையிட்டபோது இது இந்த அளவுக்கு பிரமாதமாக வரும் என்று நினைக்கவில்லை” என்றார் தோனி.
ஸ்டேடியத்தின் அபாரமான வடிவமைப்பின் பின்னணியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. தலைவர் அமிதாப் சவுத்ரி கூறுகையில், ராஞ்சி புகழ்பெற்றதற்கு தோனியே காரணம் என்று புகழாரம் சூட்டினார்.