இந்திய அணி வீரர் டி.நடராஜன்: கோப்புப் படம். 
விளையாட்டு

‘முதல் இந்தியர்’ எனும் சாதனை படைத்த நெட் பவுலர் நடராஜன்: ஐசிசி பாராட்டு

பிடிஐ

இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியத் தொடருக்கு வந்து அனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் டி.நடராஜன் என்று ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎல் லீக்கில் விளையாடிய நடராஜனின் திறமையைப் பார்த்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடராஜனுக்கு ஒரு போட்டியில்கூட வாய்ப்பு வழங்கவில்லை.

ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் பெயர் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. 13-வது ஐபிஎல் சீசனில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தனது யார்க்கர் பந்துவீச்சால் ஈர்த்தவர் தமிழக வீரர் நடராஜன் என்றால் மிகையல்ல.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த நடராஜன், டெத்பவுலிங் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறி 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நடராஜன் மீது மலைபோல் நம்பிக்கை வைத்து டேவிட் வார்னர் தொடர்ந்து வாய்ப்பளிக்க, அதைச் சிறிதும் பிசகாமல் காப்பாற்றினார். இதனால் சில போட்டிகளுக்குப் பின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளராக சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் மாறினார்.

அனுபவமான பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய நிலையில், வேகப்பந்துவீச்சுக்கு சன்ரைசர்ஸ் அணியில் வலு சேர்த்தவர் நடராஜன்.

அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிராக 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸை யார்க்கர் மூலம் நடராஜன் ஆட்டமிழக்கச் செய்தவிதம் ரசிகர்களால் மறக்க முடியாத விக்கெட்டாக இருந்து வருகிறது. ஐபிஎல் சீசனிலேயே மிகச்சிறந்த டெலிவரியாக நடராஜனுக்கு இது அமைந்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணி, நடராஜனின் திறமையை அடையாளம் கண்டு அவரைப் பட்டை தீட்டியது. நடராஜனின் அபாரமான பந்துவீச்சு திறமையால், முதல் முறையாக ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக இடம் பெற்றார்.

வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக இடம் பெற்றாரே தவிர அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், கிடைத்த வாய்ப்பில் எல்லாம் கில்லியாகச் செயல்பட்ட நடராஜனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. ஆஸி.க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜொலித்த நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 வாய்ப்பு கிடைத்து அதிலும் நடராஜன் தனது முத்திரை பதித்து இந்திய அணி 2-1 என தொடரை வெல்ல முக்கியப் பங்காற்றினார்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் தனது பந்துவீச்சால் திணறவிட்ட நடராஜன்தான் உண்மையான தொடர்நாயகன் எனக் கூறி ஹர்திக் பாண்டியா தனது தொடர் நாயகன் விருதை அவருடன் பகிர்ந்து கொண்டார்.

டெஸ்ட் தொடரில் நடராஜனால் சாதிக்க முடியுமா, போதுமான அனுபவம் இல்லை. சிவப்பு பந்துவீச்சில் பக்குவப்படாத வீரர், உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் விளையாடாத வீரர் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனால் டெஸ்ட் தொடரில் நடராஜன் களமிறங்குவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பிரிஸ்பேன் நகரில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா காயத்தால் விலகவே அந்த வாய்ப்பு நடராஜனுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் போட்டியிலும் தொடக்கத்திலிருந்து சிறப்பாகவே நடராஜன் பந்துவீசி வருகிறார்.

நடராஜனின் டெஸ்ட் போட்டி அறிமுகம் குறித்து ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது. ஐசிசி ட்விட்டரில் வெளியிட்ட பாராட்டுச் செய்தியில், “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நடராஜனை வரவேற்கிறோம். ஒரே பயணத்தில் (ஆஸி.பயணம்) இடம்பெற்று, ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் நடராஜன்தான்” எனப் பாராட்டியுள்ளது.

SCROLL FOR NEXT