பிரிஸ்பேனில் இன்று தொடங்கி நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இரு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டி நடராஜன், சுழற்பந்துவீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் இருவரும் டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமாகினர். காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, அஸ்வின் இருவரும் இடம் பெறவில்லை. இவர்கள் இருவருக்கும் பதிலாக நடராஜன், சுந்தர் சேர்க்கப்பட்டனர்.
அதேபோல, தொடையில் தசைப்பிடிப்பு காயத்தால் கடந்த சிட்னி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் அவதிப்பட்ட ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, மயங்க் அகர்வால் சேர்க்கப்பபட்டுள்ளார்.
இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர், நடராஜன், சிராஜ், ஷைனி என 4 வேகப்பந்துவீச்சாளர்களும், வாஷிங்டன் சுந்தர் சுழற்பந்துவீச்சாளரும் இடம் பெற்றுள்ளனர்.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆஸி. கேப்டன் பெய்னுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. வார்னர், மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். சிராஜ் வீசிய முதல் ஓவரின் கடைசிப்பந்தில் வார்னர் ஒரு ரன்னில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மிகவும் அருமையான லென்த்தில் இன்கட்டராக வந்த பந்து அதை தொடலாமா வேண்டாமா என்ற யோசனையில் வார்னர் தொட்டுவிட்டார், ரோஹித் சர்மா கேட்ச் பிடியாத வகையில் மிகவும் தாழ்வாக வந்த பந்தை அவர் லாவகமாகப் பிடித்து முதல்விக்கெட் வீழ காரணமாக அமைந்தார்.
அடுத்து லாபுஷேன் களமிறங்கி, ஹாரிஸுடன் சேர்ந்தார். நடராஜன் தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாகவே செய்தார். அவரின் ஒவ்வொரு ஓவரையும் ஆஸி. பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனத்துடனே விளையாடினர்.
ஷர்துல் தக்கூர் பந்துவீச அழைக்கப்பட்டார். தாக்கூர் வீசிய முதல் ஓவர், அதாவது 9-வது ஓவரின் முதல் பந்தில் ஹாரிஸ் ஸ்குயர் லெக் திசையில் பிளிக் செய்ய முயலவே பந்து வாஷிங்டன் சுந்தர் கைகளில் தஞ்சமடைந்தது. ஹாரிஸ் 5 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் வெளியேறினார். இதுவரை டெஸ்ட் போட்டியில் 11 பந்துகளை மட்டுமே வீசியிருந்த தாக்கூர், தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
அடுத்துவந்த ஸ்மித், லாபுஷேனுடன் சேர்ந்து ஆடி வருகிறார். இருவருமே மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன்கள். இருவரும் களத்தில் நின்றுவிட்டால் ஆட்டமிழக்கச் செய்வது கடினம். இதில் தாக்கூரின் பந்துவீச்சை மட்டும் லாபுஷேன், ஸ்மித் இருவரும் பவுண்டரிகளா அவ்வப்போது விளாசி வருகின்றனர். நடராஜன், சிராஜ் பந்துவீச்சை அடித்து ஆட தயங்குகின்றனர்.
24 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு63 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்மித் 29 ரன்களிலும், லாபுஷேன் 18 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
Welcome to Test cricket, @Natarajan_91