சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட்டில் டிரா செய்ய உதவிய அஸ்வினைக் கட்டித் தழுவிப் பாராட்டிய கேப்டன் ரஹானே: படம் உதவி | ட்விட்டர். 
விளையாட்டு

கடைசிவரை போராடுவதுதான் திட்டம்; முடிவைப் பற்றிக் கவலைப்படவில்லை: ரஹானே நம்பிக்கை

பிடிஐ

எங்களைப் பொறுத்தவரை கடைசிவரை போராடுவதுதான் திட்டமே தவிர, முடிவைப் பற்றி அல்ல. அஸ்வின், விஹாரியின் பேட்டிங்கையும், ரிஷப் பந்த்தின் இன்னிங்ஸையும் குறிப்பிட்டாக வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரஹானே பெருமையுடன் தெரிவித்தார்.

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி சமன் செய்தது. ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கும், இந்திய அணி 244 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

94 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி. அணி 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் சேர்த்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ரிஷப் பந்த் (97), புஜாரா (77) இருவரும் ஆட்டமிழந்தபின் இந்திய அணியின் கையைவிட்டுப் போட்டி நழுவிவிடுமோ என்ற அஞ்சப்பட்ட நிலையில், அஸ்வின், விஹாரி கூட்டணி பிரமாதமாகக் களத்தில் நங்கூரமிட்டனர். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய ஆஸி. பந்துவீச்சாளர்கள் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

அஸ்வின் 128 பந்துகள் சந்தித்து, 39 ரன்களுடனும், விஹாரி 161 பந்துகள் சந்தித்து, 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்தப் போட்டியில் தோல்வி அடையாமல் டிரா செய்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரஹானே நிருபர்களிடம் கூறியதாவது:

''இன்று காலையில் போட்டி தொடங்கும்போதே எங்கள் போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் பேசிக்கொண்டுதான் புறப்பட்டோம். முடிவைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. கடைசிவரை போராட வேண்டும் என்று அணிக்குள் முடிவு செய்தோம்.

அந்த வகையில் இந்தப் போட்டியில் வீரர்கள் அனைவரும் கடைசிவரை போராடியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அடுத்த 138 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கியதும் மகிழ்ச்சியாக இருந்தது.

4-வது டெஸ்ட் போட்டியின்போது சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், இந்தப் போட்டியைப் பொறுத்தவரை அஸ்வின், விஹாரியின் பேட்டிங்கை சிறப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதேபோல, ரிஷப் பந்த்தின் பேட்டிங் அருமையாக இருந்தது. அவர் விளையாடிய விதம் போட்டியின் டிராவுக்கு உரித்தானது''.

இவ்வாறு ரஹானே தெரிவித்தார்.

SCROLL FOR NEXT